பேருந்தில் இலவசப் பயணம்:முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொது மக்கள் நன்றி

பேருந்தில் இலவசப் பயணம்:முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொது மக்கள் நன்றி

சனி, டிசம்பர் 05,2015,

                சென்னை மாநகரப் பேருந்துகளில் வரும் 8-ம் தேதி வரை இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததால் இன்று சென்னை மாநகரப் பேருந்துகளில் மக்கள் இலவசமாகப் பயணம் செய்தார்கள்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இப்போது இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருகிறது. மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும், இந்த வேளையில் மக்கள் உள்ளூர் பயணங்கள் மேற்கொள்ளும் அவசியம் ஏற்படும். எனவே, இதற்கு வசதியாக சனிக்கிழமை (டிச.5) முதல் வரும் 8 ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. இந்த நான்கு நாள்களும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் ஏதுமின்றி மக்கள் பயணம் செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.

இன்றுமுதல் பேருந்துகளின் இயக்கம் ஓரளவு சீரான நிலையில் மக்கள் அதிகளவில் பேருந்துகளில் பயணம் செய்தார்கள். சென்னை முழுக்க ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கமுடியாத சூழல் நிலவுவதால் முதல்வரின் இந்த அறிவிப்பு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நீண்டதூரங்களில் பயணம் செய்பவர்களுக்கு இச்சலுகை மிகவும் உபயோகமாக இருக்கிறது.

பேருந்தில் பயணச் சீட்டு எடுக்கத் தேவையில்லை என்றாலும் பேருந்துகளில் நடத்துநர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். பேருந்தில் மக்கள் ஏறுவது, இறங்குவதை ஒழுங்குபடுத்தவும், டிராபிக் நெருக்கடிச் சமயங்களில் ஓட்டுநருக்கு உதவி செய்யவும் அவர்கள் பணியில் இருந்தார்கள்.

              இலவச பஸ் சேவை காரணமாக யாரும் கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. மாநகர பஸ்களில் மக்கள் மகிழ்ச்சியாக  பயணத்தை மேற்கொண்டதை காண முடிந்தது.

  இக்கட்டான நிலையில் உதவி செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொது மக்கள் பலரும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.