பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி வசதியாகச் செல்ல, நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பயணிகள் நன்றி

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி வசதியாகச் செல்ல, நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பயணிகள் நன்றி

ஞாயிறு, ஜனவரி 10,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், சென்னையிலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கும், மாநிலத்தின் பிற ஊர்களில் இருந்தும், 9-ம் தேதிமுதல் 14-ம் தேதிவரை 12,624 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில், அவர்கள் சிரமம் ஏதுமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் பொங்கல் பண்டிகையின்போது கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இதற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்திருப்பதால், இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகளை இயக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 9-ம் தேதி482 சிறப்புப் பேருந்துகள், 10-ம் தேதி 504 சிறப்புப் பேருந்துகள், 11-ம் தேதி 365 சிறப்புப் பேருந்துகள், 12-ம் தேதி 539 சிறப்புப் பேருந்துகள், 13-ம் தேதி ஆயிரத்து 345 சிறப்புப் பேருந்துகள், 14-ம் தேதி ஆயிரத்து 447 சிறப்புப் பேருந்துகள் என, மொத்தம் 4 ஆயிரத்து 682 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுதவிர, மாநிலத்தின் மற்ற முக்கிய ஊர்களிலிருந்து மொத்தம் 7,942 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்றுமுதல் 14-ம் தேதிவரை 12,624 சிறப்புப் பேருந்துகளை இயக்க முதலமைச்சர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்துள்ளார்.

300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதனை வரவேற்றுள்ள பொதுமக்கள், சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட வழிவகை செய்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நன்றி தெரிவித்தனர்.