பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் சிரமமுமின்றி சொந்த ஊருக்குச் செல்ல 17,693 சிறப்புப் பேருந்துகள் ; தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் சிரமமுமின்றி சொந்த ஊருக்குச் செல்ல 17,693 சிறப்புப் பேருந்துகள் ; தமிழக அரசு அறிவிப்பு

புதன், டிசம்பர் 28,2016,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் தமிழகத்தின் பிற இடங்களில் இருந்து, ஜனவரி மாதம் 11-ம் தேதிமுதல், 13-ம் தேதி வரை, 3 நாட்களுக்கு 17,693 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரில் குடும்பத்தினருடன், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்ய ஏதுவாக, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா உத்தரவின் பேரில் ஆண்டுதோறும், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அதனடிப்படையில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 17 ஆயிரத்து 693 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பிற ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன், வரும் ஜனவரி மாதம் 11-ம் தேதியன்று 794 சிறப்புப் பேருந்துகளும், ஜனவரி 12-ம் தேதியன்று 1,779 சிறப்புப் பேருந்துகளும், ஜனவரி 13-ம் தேதியன்று 1,872 சிறப்புப் பேருந்துகளும் என இந்த மூன்று நாட்களிலும் 4,445 சிறப்புப் பேருந்துகளுடன் மொத்தம் 11,270 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மாநிலத்தின் பிற ஊர்களில் இருந்து, வரும் ஜனவரி மாதம் 11-ம் தேதியன்று 991 சிறப்புப் பேருந்துகளும், ஜனவரி 12-ம் தேதியன்று 2,291 சிறப்புப் பேருந்துகளும், ஜனவரி 13-ம் தேதியன்று 3,141 சிறப்புப் பேருந்துகளும் என இந்த மூன்று நாட்களிலும் 6,423 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆக மொத்தம் தமிழகம் முழுவதிலும் இருந்து 17,693 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.