பொங்கல் பரிசுத் தொகுப்பு: விநியோகத்தை தொடக்கிவைத்தார் முதல்வர் ஜெயலலிதா

பொங்கல் பரிசுத் தொகுப்பு: விநியோகத்தை தொடக்கிவைத்தார் முதல்வர் ஜெயலலிதா

வியாழன் , ஜனவரி 07,2016,

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார்.

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐந்து பேருக்கு இத்தொகுப்பை வழங்கினார் .

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகிய 1 கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.

அதன்படி அத்தொகுப்பினை வழங்கிடும் அடையாளமாக 5 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடக்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சூ.கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கா. பாலச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எ.சுந்தரவல்லி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.