பொதுவாழ்க்கைக்காகத் தனது சொந்த வாழ்க்கையே தியாகம் செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ; ரஜினிகாந்த்

பொதுவாழ்க்கைக்காகத் தனது சொந்த வாழ்க்கையே தியாகம் செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ; ரஜினிகாந்த்

திங்கள் , டிசம்பர் 12,2016,

சென்னை,

பொதுவாழ்க்கைக்காகத் தனது சொந்த வாழ்க்கையே தியாகம் செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்று நடிகர் சங்கம் சார்பில் நடந்த இரங்கல் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி ஆகியோருக்கு நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்க நிர்வாகிகள், மூத்த நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மறைந்த ஜெயலலிதா மற்றும் சோ ஆகியோரின் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். மேடையில், ஜெயலலிதா, சோ ராமசாமி ஆகியோரின் உருவபடங்கள் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த படங்களுக்கு பழம் பெரும் நடிகர்–நடிகைகள், இளம் நடிகர்கள் உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து வணங்கினார்கள்.கூட்டம் தொடங்கியதும், 2 நிமிடம் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

இருவரது உருவபடங்களுக்கும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:–

எம்.ஜி.ஆர். தான் அரசியலில் அவருக்கு குரு, ஆசான். ஆனால், அரசியலிலும் சரி, சாதனைகள் புரிந்ததிலும் சரி குருவையே மிஞ்சினார் என்றால் அது மிகையாகாது. ஜெயலலிதா ஒரு வைரம். பூமியில் கார்பன்கள் இருக்கிறது. அவை வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் தேய்த்து தேய்த்து வைரமாக மாறும். அது போல் ஜெயலலிதாவும் வைரமாக மாறியவர்.

ஆணாதிக்க சமுதாயத்தின் அழுத்தங்கள், விமர்சனங்கள், துன்பங்கள் ஆகியவற்றை சந்தித்து சந்தித்து வைரமாக மாறிப்போனார். கோடான கோடி மக்கள் கவலையாலும், கண்ணீராலும் அவருக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். ஜெயலலிதா ஒரு கோகினூர் வைரம். புரட்சி தலைவரின் பக்கத்திலேயே சமாதி ஆகியிருக்கிறார். 7 நாட்களாக லட்சக்கணக்கான மக்கள் அவர் சமாதியில் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். இது சாதாரண சக்தி இல்லை. இறைவனுடைய ஆசீர்வாதம்.

2 வயதில் அப்பாவை இழந்தார். படிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. நடிப்பில் ஆசையில்லை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை படிக்க விடாமல் செய்தது. 22 வயதில் அம்மாவை இழந்தார். அளவற்ற அழகு, அளவற்ற அறிவு, அளவற்ற புகழ் இருந்தும் திருமணம் செய்து கொள்ளவில்லை. பக்கத்தில் உறவினர்கள் இல்லை. தன்னந்தனியாக வாழ்ந்தார்.

அ.தி.மு.க. சாதாரண கட்சி இல்லை. அந்த கட்சியை கஷ்டப்பட்டு, கட்டிக்காத்து உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றார். இது பெரிய காரியம். உடல் நலம் குன்றியிருந்த போதும் தேர்தலை சந்தித்து பிரசாரங்கள் செய்து அ.தி.மு.க.வை ஆட்சியில் உட்கார வைத்து விட்டார்.

ஆஸ்பத்திரியில் 3 மாதம் சிகிச்சை பெற்ற போது, குணம் அடைந்துவிட்டார். திரும்பி வருவார் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அவர் வரவில்லை. ஆண்டவனிடம் போய்விட்டார். அவரது ஆத்மா, மகாத்மா ஆகிவிட்டது. தனது வாழ்க்கையில் சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றியவர் அவர். பெண்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் அவரது வாழ்க்கை உதாரணமாகவும், பாடமாகவும் இருக்கிறது.அது போல் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்த சோ ராமசாமியும் மறைந்துவிட்டார். இருவரின் ஆத்மாக்களும் சாந்தி அடையட்டும்.  இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.இரங்கல் கூட்டம் நடத்த திருமண மண்டபத்தை ரஜினிகாந்த் கட்டணம் இன்றி இலவசமாக வழங்கியிருந்தார்.

இரங்கல் கூட்டத்தில், நடிகர்கள் சிவகுமார், பாக்யராஜ், தனுஷ், ஜீவா, நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், நடிகர்கள் எஸ்.வி.சேகர், மனோபாலா, ராஜேஷ், ஐசரி கணேஷ், உதயா, கார்த்திக், மோகன், விவேக், வடிவேலு, ஷாம், செந்தில், சிங்கமுத்து, டைரக்டர்கள் முக்தா சீனிவாசன், கே.எஸ்.ரவிக்குமார், நடிகைகள் லதா, வாணிஸ்ரீ, ஷீலா, ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா, பாரதி, ரேகா, கோவை சரளா, சோனா, சரண்யா, குட்டி பத்மினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.