பொது மக்கள் வசதிக்காக இணைய சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தும் புதிய வசதி: தமிழக அரசு அறிவிப்பு

பொது மக்கள் வசதிக்காக இணைய சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தும் புதிய வசதி: தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளி, ஜனவரி 22,2016,

தமிழக அரசின் இணைய சேவை மையங்களில் மின் கட்டணத்தைச் செலுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மாநிலம் முழுவதும் அரசு இணைய சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்கள், அனைத்து பகுதி அலுவலகங்கள், அனைத்து கோட்ட அலுவலகங்கள், சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 465 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இணைய சேவை மையங்களில் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த் துறை சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கு சேவைக் கட்டணமாக ரூ. 50 வசூலிக்கப்படுகிறது. மேலும், சமூக நலத் துறையின் சேவைகளான பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான சேவைகளும் அளிக்கப்படுகின்றன. இவற்றிற்கு சேவைக் கட்டணமாக ரூ. 100 வசூலிக்கப்படுகிறது. இணைய சேவை மையங்களில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு அவர்களின் சான்றிதழ் தொடர்பான தகவல் அவர்களுடைய செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது.
சென்னை மாநகராட்சி தலைமையிடம், சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்கள், அனைத்துப் பகுதி அலுவலகங்கள், அனைத்துக் கோட்ட அலுவலகங்கள் ஆகிய அலுவலக வளாகங்களில் நிறுவப்பட்டுள்ள சேவை மையங்களில் அரசு சேவைகளுடன் சொத்து வரி, தொழில் வரி, நிறுவனங்களின் வரி ஆகியவற்றை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
இந்த மையங்களில் பொது மக்கள் வசதிக்காக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தைச் செலுத்தும் வசதியும் தற்போது கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின் கட்டணத் தொகை ரூ. 1-இல் இருந்து ரூ. 1000-க்குள் இருந்தால் அதற்கான சேவைக் கட்டணம் ரூ. 10- ஆகவும், ரூ. 1001-இல் இருந்து ரூ. 3,000-க்குள் இருந்தால் அதற்கான சேவைக் கட்டணம் ரூ. 20-ஆகவும், ரூ. 3001-இல் இருந்து ரூ. 5,000-க்குள் இருந்தால் அதற்கான சேவைக் கட்டணம் ரூ. 30-ஆகவும், ரூ. 5001-இல் இருந்து ரூ. 10,000-க்குள் இருந்தால் அதற்கான சேவைக் கட்டணம் ரூ. 50-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.