போடியில் ரூ.19 கோடியே 67 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் : சுகாதார வசதிகளை அமல்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,மக்கள் நன்றி

போடியில் ரூ.19 கோடியே 67 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் : சுகாதார வசதிகளை அமல்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,மக்கள் நன்றி

ஞாயிறு, பெப்ரவரி 07,2016,

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டியில் 19 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சுகாதார வசதிகளை மேம்படுத்த சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி வரும் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு தேனி மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டி பேரூராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் நகரத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அனுப்பினர். அதனை தாயுள்ளத்துடன் பரிசீலித்த முதலமைச்சர், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த 19 கோடியே 67 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றும் வகையில் கட்டுமானப் பணியை அமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பார்த்திபன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி மற்றும் சொந்தாரப்பட்டியில் இருந்து பழனி மற்றும் பெரம்பலூருக்கு இருவழித்தடத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பேருந்து சேவையை அமைச்சர் திரு. எடப்பாடி.கே.பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் குப்பாண்டபாளையம், உஞ்சனை, மோளியப்பள்ளி மற்றும் நல்லிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் 43 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ள புதிய சாலை கட்டுமானப் பணியை அமைச்சர் திரு. P.தங்கமணி துவக்கி வைத்தார். தொடர்ந்து, செட்டியாம்பாளையம் மற்றும் பாப்பம்பாளையத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளின் புதிய கட்டடங்களையும் அமைச்சர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறையில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளை அமைச்சர் திரு. எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள வெம்பக்கோட்டை நீர்த்தேக்க அணையை 2 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கும் பணியை அமைச்சர் திரு. ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஒன்றியக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், 22 லட்சம் ரூபாய் மதிப்பில் விவசாயிகளுக்கு மான்ய விலையில் வேளாண் கருவிகளை கழக நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. வி.சத்தியபாமா, சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினர். முதலமைச்சரின் உத்தரவின்பேரில் மான்ய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டு வருவதால் மகசூல் பன்மடங்கு அதிகரித்து, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேலக்காந்தி நகரில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணியை அமைச்சர் திரு. ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். இதேபோல், விருதுநகரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கு 5 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள விடுதி கட்டுமானப் பணியும் துவக்கி வைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சகாதேவன்பேட்டை, சேர்ந்தனூர் மற்றும் ராமபுரம் ஆகிய பகுதிகளில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள், திறந்து வைக்கப்பட்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.