மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வியாழக்கிழமை, மார்ச் 09, 2017,

திருநெல்வேலி : தமிழகத்தில் மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் முதல்வர் பேசியதாவது :-

இந்த அரசு பதவியேற்ற குறுகிய காலத்தில், அடுக்கடுக்கான பணிகளை செய்துள்ளது.
முதல்வர் பதவியேற்றவுடன், 5 சிறப்புத் திட்டங்களுக்கு கையெழுத்திட்டேன். உழைக்கும் மகளிர் பயன்பெறும் வகையில், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு ரூ.200 கோடி செலவில் அம்மா இருசக்கர வாகனத் திட்டம், மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்வு, மீனவர்களுக்கு தனி வீட்டு வசதித் திட்டத்தில் ரூ.85 கோடியில் 5 ஆயிரம் வீடுகள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்ற அடிப்படையில், மேலும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்நிலைகளை புனரமைக்க ரூ.100 கோடியில் பண்டைய குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசின் 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தை பல மண்டலங்களாக பிரித்து முடிவுற்ற திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி மண்டலத்துக்குள்பட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ரூ.235 கோடியே 61 லட்சம் மதிப்பில் 1,098 திட்டப் பணிகள் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் 2,541 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6ஆம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் பிரட்ஜோ உயிரிழந்துள்ளார். இலங்கையின் அத்துமீறலை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழக அரசின் கடிதத்தை ஏற்று, இலங்கையிடம் விளக்கம் கேட்டுள்ளது மத்திய அரசு. மீனவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக தமிழக அரசு இருக்கும்.

தமிழகத்தில் 140 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் 32 லட்சத்து 30 ஆயிரத்து 91 பேருக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கவும், நீராதாரங்களை மேம்படுத்தவும் ரூ.350 கோடியில் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. நகர்ப்புறங்களில் ரூ.160 கோடி மதிப்பில் பணிகள் நடைபெறுகின்றன. இதுமட்டுமல்லாது, பொதுப்பணித் துறை மூலம், நிலத்தடி நீர் தேக்கும் அமைப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்பு போன்ற நீராதாரங்களை மேம்படுத்த ரூ.25 கோடியில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மகளிரும் குழந்தைகளும் தனது இரு கண்கள் என குறிப்பிடுவார். அவரது வழியில் நடைபெறும் தமிழக அரசானது, மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தும் என்பதை சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளுடன் தெரிவிக்கிறேன். முதல் நாளில் கையெழுத்திட்ட 5 திட்டங்களில் 2 திட்டங்கள் மகளிர் நலனுக்குரியவை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்த விழாவில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, எம்.பி.க்கள் கே.ஆர்.பி. பிரபாகரன், வசந்தி முருகேசன், எம்எல்ஏ.க்கள் ஆர். முருகையாபாண்டியன், ஐ. எஸ். இன்பதுரை, தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாப்புலர் வி. முத்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.