மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை தொடக்கம் – முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மகளிர் சுய உதவிக் குழுவினர் நன்றி

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை தொடக்கம் – முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மகளிர் சுய உதவிக் குழுவினர் நன்றி

தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக மகளிர் சுய உதவிக் குழு சார்பில், அம்மா சிமெண்ட் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஏழை-எளிய மக்களின் வீடு கட்டும் கனவை நனவாக்கும் விதமாக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, குறைந்த விலையிலான தரமான அம்மா சிமெண்ட் விற்பனை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மாநிலம் முழுவதும் மிகச்சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கெனவே 14 கிடங்குகளில், மலிவு விலையில் அம்மா சிமெண்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 7 லட்சத்து 70 ஆயிரம் சிமெண்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி ஊராட்சியில், 15-வது விற்பனை மையத்தில், முதன் முதலாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் திரு. N.சுப்பையன் திறந்துவைத்து, விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த விற்பனை மையம் மூலம் கிடைக்கும் வருவாயால், பொருளாதார மேம்பாடு அடைவதற்கும், புதிய தொழில் முனைவோராக உயருவதற்கும், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களின் விற்பனை கண்காட்சி தொடங்கியுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் திரு. கருணாகரன் தொடங்கி வைத்தார். 20 அரங்குகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்த அலங்காரப் பொருட்கள், கைப்பைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. கல்லூரி மாணவிகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த விற்பனை கண்காட்சி நாளை நடைபெறவுள்ளது.

Tags: Latest News