“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்”மிகச்சிறப்பாக செயல்பட்ட தமிழகத்திற்கு தேசிய விருது:மத்திய அரசு அறிவிப்பு

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்”மிகச்சிறப்பாக செயல்பட்ட தமிழகத்திற்கு தேசிய விருது:மத்திய அரசு அறிவிப்பு

செவ்வாய், பெப்ரவரி 02,2016,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ், மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளதாக தமிழகத்திற்கு மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தேசிய விருது கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி இத்திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்திய, நாடு முழுவதிலும் உள்ள 10 மாவட்டங்களில் தமிழகத்தின் புதுக்கோட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் விருது கிடைத்துள்ளது என பிரபல ஆங்கில நாளேடு “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்தி வெளியிட்டுள்ளது.

“டைம்ஸ் ஆப் இந்தியா” இன்று வெளியிட்டுள்ள செய்தியில், 2013-2014-ம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டதாகவும், முதலில் 6 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 31-ல் 9 ஆயிரம் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், கிராமப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை அளிக்க உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

மத்திய அரசின் இந்த திட்டம் தொடங்கப்பட்டு 10-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நாட்டிலேயே இத்திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தியதற்கான விருதினை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் தமிழகத்திற்கு அறிவித்துள்ளது. இத்திட்டத்துடன் இணைந்து, கிராமப் பகுதிகளில் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. மேலும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும் நாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு, மற்றொரு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இத்திட்டத்தின்கீழ், பெண்களுக்கே அதிக வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. சுமார் 86 சதவீத பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.

மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் அரைநாள் வேலை செய்தாலேயே, அவர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும் என்ற சலுகை திட்டத்தை தமிழக அரசுதான் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. மேலும், இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள தொழிலாளர்கள், கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணி, மரக்கன்றுகள் நடும் பணி ஆகியவற்றில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழக அரசு அறிமுகப்படுத்திய இந்த 2 திட்டங்களையும் தற்போது மற்ற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன என அந்த நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெற்று வருவதாகவும், இவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், ஊரக வளர்ச்சித் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் இந்நாளேடு குறிப்பிட்டுள்ளது.