மக்களவை முன்னாள் சபாநாயகர் P.A.சங்மா மறைவுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

மக்களவை முன்னாள் சபாநாயகர் P.A.சங்மா மறைவுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

சனி, மார்ச் 05,2016,

முன்னாள் மக்களவை சபாநாயகர் திரு.P.A. சங்மாவின் மறைவு குறித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நீண்டகால அரசியல்வாதியும், மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியுமான திரு.P.A. சங்மா இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.

திரு.சங்மா மக்களவை சபாநாயகராகவும், மேகாலய மாநில முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளதோடு, அவரது நீண்டகால அரசியல் வரலாற்றில் பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

திரு.சங்மா பழகுவதற்கு இனிமையானவர்- அனைவருடனும் அனுசரித்துப் போகக்கூடியவர். இதனால், அரசியல் வேறுபாடுகளை கடந்து, அனைவரது பாராட்டையும் பெற்றவர். அடித்தட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய அயராத பணிகளும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவரது நகைச்சுவை மற்றும் நெறிபிறழாத நாவன்மை ஆகியவை காலம் என்ற மணற்பரப்பில் என்றும் பொறிக்கப்பட்டிருக்கும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா புகழாரம் சூட்டியுள்ளார்.

திரு.சங்மாவின் மறைவு குறித்து, அவரது குடும்பத்தாருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது ஆன்மா நிரந்தர அமைதிபெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுவதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.