மக்களுக்காகவே வாழ்கிற முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்குவோம் – சமக மகளிரணித் தலைவி ராதிகா சரத்குமார் பேச்சு

மக்களுக்காகவே வாழ்கிற முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்குவோம் – சமக மகளிரணித் தலைவி ராதிகா சரத்குமார் பேச்சு

ஞாயிறு, ஏப்ரல் 17,2016,

மக்களுக்காகவே வாழ்கிற முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்குவோம்  என்றார் சமக மகளிரணித் தலைவி ராதிகா சரத்குமார். கச்சத்தீவை பற்றிப் பேச திமுகவுக்கு தகுதி இல்லை என்றும் அவர் கூறினார். 
 திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை ஆதரித்து புன்னக்காயல், ஆத்தூர், குரும்பூர் மற்றும் ஆழ்வார்திருநகரி ஒன்றிய பகுதியில் சரத்குமாரின் மனைவியும் சமக மகளிரணித் தலைவியுமான ராதிகா சரத்குமார் பிரசாரம் செய்தார்.
 அப்போது அவர் பேசியதாவது: கச்சத்தீவை மீட்போமென திமுகவினர் கூறுகின்றனர். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கையில் திமுகதான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது. அப்படியிருக்கையில் திமுகவுக்கு கச்சத்தீவை பற்றி பேச என்ன தகுதி உள்ளது?
 குடும்பத்துக்காகவே கட்சி நடத்துபவர்கள் ஏற்படுத்தியுள்ள கூட்டணி திமுக கூட்டணி. அது சந்தர்ப்பவாத கூட்டணி. திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் சட்டப் பேரவை உறுப்பினராக இருப்பவர். அவர் நான்கரை ஆண்டுகாலம் தொகுதி பக்கமே வரவில்லை.
 அதிமுக கூட்டணிக்காக களமிறங்கியிருக்கும் வேட்பாளர் சரத்குமார், ஏற்கெனவே வெற்றி பெற்றிருந்த தென்காசி தொகுதியில் அவரது சொந்த செலவிலேயே பல்வேறு பணிகளைச் செய்துள்ளார்.
 மீண்டும் தமிழகத்தில் நிலையான ஆட்சி, நல்லாட்சி மலர்ந்திட சரத்குமாரை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் ஜாதி, மதக் கலவரங்கள் கிடையாது. சட்டம் – ஒழுங்கு பிரச்னை இல்லை. மக்களுக்காகவே வாழ்கிற முதல்வரை மீண்டும் முதல்வராக்கிடவே இங்கு உங்களிடம் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன் என்று ராதிகா சரத்குமார் பிரசாரம் செய்தார்.