மக்களுக்காக உழைப்பது அதிமுக குடும்பத்துக்காக உழைப்பது திமுக : முதல்வர் ஜெயலலிதா குற்றசாட்டு

மக்களுக்காக உழைப்பது அதிமுக குடும்பத்துக்காக உழைப்பது திமுக : முதல்வர் ஜெயலலிதா குற்றசாட்டு

வெள்ளி, மே 13,2016,

திமுக தலைவர் கருணாநிதி தனது குடும்பத்திற்காக மட்டுமே உழைப்பதாக, தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

பாளையங்கோட்டையில் இன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் போட்டியிடும் 20 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளரும்,முதலமைச்சருமான ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், திமுக தலைவர் கருணாநிதி தன் மக்களின் நலனுக்காக உழைப்பவர் என்றும், தான் மட்டுமே மக்களின் நலனை கருத்தில் கொண்டு உழைத்து வருவதாகவும் குறிப்பிட்டார். தமிழினப்படுகொலைக்கும், கச்சத்தீவை தாரை வார்க்கவும் காரணமாக இருந்தது, திமுக என்று குற்றம் சாட்டிய ஜெயலலிதா, அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டப் பணிகளையும் பட்டியலிட்டார்.

அதிமுக ஆட்சியில் மருத்துவ பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய முயன்றதாக கூறிய ஜெயலலிதா, திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு அளிக்கப்படும் வாக்கு, வளர்ச்சிக்கு வைக்கப்படும் வேட்டு என்றும் தெரிவித்தார்.

திமுகவினர் வாக்கு கேட்டு வந்தால், அவர்களை துரத்தி அடிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டு கொண்டார். 2011 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதாகவும், ஜெயலலிதா குறிப்பிட்டார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மருத்துவப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு இல்லாமலே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை பட்டியலிட்டு ஜெயலலிதா வாக்கு சேகரித்தார். மக்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளதாக குறிப்பிட்ட ஜெயலலிதா,
மக்களை ஏமாற்றும் திட்டம், திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளதாகவும் குறை கூறினார்.