மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய இயக்கம் அதிமுக : அமைச்சர் எம்.சி.சம்பத்

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய இயக்கம் அதிமுக : அமைச்சர் எம்.சி.சம்பத்

செவ்வாய், மார்ச் 08,2016,

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடலூர் முதுநகரில் திங்கட்கிழமை இரவில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டச் செயலரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை வகித்து பேசுகையில், கடந்த தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய இயக்கமாக அதிமுக உள்ளது.

நீண்டகாலமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுவிக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். அதன்பின்னர் கருணாநிதி நாங்கள் தான் அதற்கான நடவடிக்கை எடுத்தோம் என்று கூறி வருகிறார். எப்போதும் தமிழ், தமிழ் என்றுக் கூறி வரும் கருணாநிதி தமிழர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. அதேநேரத்தில் காங்கிரஸ் தலைமையில் அமைந்த மத்திய அரசு தான் இலங்கையில் தமிழர்களை கொல்வதற்கு ஆயுதம் வழங்கியது. அந்த ஆட்சியில் திமுகவும் இடம் பெற்றிருந்தது.

தற்போது அதேக்கட்சிகள் தான் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.

மக்கள் நலக்கூட்டணியால் மக்களை நெருங்கக் கூட முடியாது. தன்னை முதல்வர் வேட்பாளர் என்றுக் கூறிக் கொள்ளும் அன்புமணி மீது மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி கொடுத்த வழக்கு உள்ளது. மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே என்ற பயணத்தை காலம்கடந்த நிலையில் மேற்கொண்டு தோல்வி கண்டுள்ளார். ஆனால், மாவட்டம் முழுவதும் அரசின் திட்டங்களை முதல்வர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம், புதிய ஆட்சியர் அலுவலகம், சுங்கச்சாலைத் திட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளது. இவைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையில் எடுக்கப்பட்டத் திட்டங்கள். வரும் தேர்தலில் மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும். அதற்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றார்.

கூட்டத்திற்கு மாவட்ட துணைசெயலர் கே.முருகுமணி, நகர செயலர் ஆர்.குமரன்,  நகர கூட்டுறவு சங்கத் தலைவர் டி.ரவிச்சந்திரன், கவுன்சிலர் வ.கந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பேச்சாளர் நாஞ்சில்சம்பத், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சொரத்தூர் இரா.ராஜேந்திரன், எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், மாவட்ட அவைத்தலைவர் கோ.ஐயப்பன், மருத்துவ பிரிவு துணை செயலர் கே.சீனுவாசராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஜெ.பேரவை செயலர் பி.ரவிச்சந்திரன், எம்ஜிஆர் இளைஞரணி செயலர் இரா.வெ.பெருமாள்ராஜா, தொழிற்சங்க செயலர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், விவசாய பிரிவு செயலர் கே.காசிநாதன், மீனவர் பிரிவு செயலர் கே.தங்கமணி, ஒன்றிய செயலர் இராம.பழனிச்சாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் ஜி.ஜெ.குமார் வரவேற்க, ஒன்றிய செயலர் பி.வி.ஜெ.முத்துகுமாரசாமி நன்றி கூறினார்.