மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா ஆதரிக்க மாட்டார் : சி.ஆர்.சரஸ்வதி பேட்டி

மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா ஆதரிக்க மாட்டார் : சி.ஆர்.சரஸ்வதி பேட்டி

புதன், நவம்பர் 16,2016,

மக்களை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் முதல்வர் ஜெயலலிதா ஆதரிக்கமாட்டார் என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி விளக்கம் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக சி.ஆர்.சரஸ்வதி அளித்த சிறப்புப் பேட்டி;

தேர்தலில் வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதல்வர், இந்தப் பிரச்சினை யில் அறிக்கை விடவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்களே?

குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் இவர்கள். மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிடும் முன்பு முழுமையாக ஆராய வேண்டும் அல்லவா? அதனால்தான் தாமதமாகிறது. முதல்வர் விரைவில் வீடு திரும்பியதும் இதுகுறித்து தனது கருத்தைப் பதிவு செய்வார்.

மத்திய அரசின் உதய் மின் திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம் போன்றவற்றில் அரசு தன் முடிவை மாற்றிக் கொண்டதே?

இந்தத் திட்டங்களால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில்கொண்டே முதல்வர் எதிர்த்தார். பிறகு மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் முதல்வரைச் சந்தித்தார். தமிழக அமைச்சர்களும் டெல்லி சென்று அவரைச் சந்தித்தனர். மானியம் உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் வைத்திருந்த கோரிக்கைகளுக்கு அவர்கள் சம்மதித்ததால், தமிழக அரசு அதனை ஏற்றுக்கொண்டது.

முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே, ‘அம்மா பூரண குணமடைந்து விட்டார். விரைவில் வீடு திரும்புவார்’ என்று நீங்கள் சொல்லி வருவதை சமூக வலைதளங்களில் அதிகமாக ஏளனம் செய்கிறார்களே?

நான் சொன்ன கருத்தைத் தானே பிறகு, அப்பல்லோ மருத்துவமனையும், அதன் தலைவர் பிரதாப் ரெட்டியும் சொன்னார்கள். தங்கள் படிப்பை யும், தொழில்நுட்ப அறிவையும் மற்றவர்களை வேதனைப்படுத்தவும், ஏளனம் செய்யவும் பயன்படுத்துபவர்களை நான் பொருட்படுத்துவது இல்லை.

மோடியின் அதிரடி அறிவிப்பு குறித்து, தமிழக முதல்வரின் கருத்து என்ன?

பொதுவாக, மக்களைப் பாதிக்கிற எந்தத் திட்டத்தையும் அவர் வரவேற்கமாட்டார். கள்ள நோட்டுகள் ஒழிக்கப்பட வேண்டும், கறுப்புப் பணம் மீட்கப்பட வேண்டும் என்பதை முழுமையாக ஆதரிப்பார். ஆனால், இந்த நடவடிக்கையை எடுக்கும் முன், மத்திய அரசு தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். இரவு 12 மணியோடு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இரவு 8 மணிக்கு மேல் சொன்னதால், மக்கள் தவித்துப் போனார்கள்.

இவ்வாறு சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.