மக்கள் மீது அன்பும்-அக்கறையும் கொண்ட ஒரே இயக்கம் அதிமுக: திருமண விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

மக்கள் மீது அன்பும்-அக்கறையும் கொண்ட ஒரே இயக்கம் அதிமுக: திருமண விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வியாழன் , பெப்ரவரி 11,2016,

தமிழக மக்கள் மீது அதிக அன்பும், அக்கறையும், மரியாதையும் கொண்ட ஒரே இயக்கம் அதிமுகதான் என்று முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பேசினார்.
அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், முக்கூர் என்.சுப்பிரமணியன், எஸ்.பி.சண்முகநாதன், மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 14 அதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமணங்களை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை நடத்தி வைத்தார்.
இந்த 14 திருமணங்களையும் அடுத்தடுத்து தனித்தனியே முதல்வர் நடத்தி வைத்தார். முதலில், அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மகள், அதையடுத்து அமைச்சர் ஆர்.காமராஜ் மகன் என வரிசையாக திருமணங்களை அவர் நடத்தி வைத்தார். மணமகன் கையில் மங்கல நாணை எடுத்துக் கொடுத்த அவர், மணமகள் கழுத்தில் கட்டச் செய்ததுடன், மாலையையும் மாற்றிக் கொள்ளச் சொன்னார். பின்னர், மணமக்களுக்கு திருமணப் பரிசை முதல்வர் வழங்கினார்.
திருமணங்களை நடத்திவைத்த பிறகு, மணமக்களை வாழ்த்தி முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
வாழ்க்கையில் வெற்றி பெற…: அடுத்தவர் மகிழ்ச்சியில், தன் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று வாழ்வதே இனிய இல்லறமாகும். வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இருக்கும். லாபமும் நஷ்டமும் இருக்கும்.
ஆனாலும், எதற்கும் அச்சப்படக் கூடாது. எதிர்ப்புகளும், துன்பங்களும் நம்மை புடம் போட்ட தங்கமாக மாற்ற வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் அடுத்தவர் இயல்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது, அடுத்தவர் என்ன செய்வார் என்பதை அறிந்து நாம் அதற்கேற்ப செயலாற்ற முடியும்.
மக்கள் நலனில் அக்கறை: தமிழகத்தின் நலன்கள் மீதோ, தமிழக மக்களின் நலன்கள் மீதோ அக்கறை இல்லாத எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன. அவர்களது ஒரே குறிக்கோள் மக்கள் சக்தி படைத்த மாபெரும் இயக்கமான அதிமுகவை வசைபாடுவதுதான். நம் வளர்ச்சி பொறுக்காமல் அவர்கள் நம்மை வசை பாடுகிறார்கள். இதுதான் நம் வளர்ச்சியின் அளவுகோல்.
பிறர் நம்மை பேசும் வசை பேச்சுகளை உரமாக்கிக் கொண்டு மக்கள் மீது அதிக அன்பும் அக்கறையும் மரியாதையும் கொண்ட இயக்கமாக விளங்கிக் கொண்டிருக்கிற ஒரே இயக்கம் அதிமுகதான் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
தேர்தல் களப்பணியாற்றுங்கள்: “”உழைப்பால் வெற்றியை உருவாக்கு, முயற்சியை அதற்கு எருவாக்கு” என்பதற்கேற்ப, நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெறும் வகையில் கட்சியினர் அனைவரும் களப்பணியாற்ற வேண்டும். உங்களால் முடியாதது வேறு யாரால் முடியும்? நிச்சயம் இதை நீங்கள் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றார் முதல்வர் ஜெயலலிதா.
திருமண விழாவுக்கு வந்திருந்தவர்களை, அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் வரவேற்றார். அமைச்சர் ஆர்.காமராஜ் நன்றி தெரிவித்தார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.