மணிமுத்தாறு அணையிலிருந்து பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு – 22,852 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெற நடவடிக்கை

மணிமுத்தாறு அணையிலிருந்து பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு – 22,852 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெற நடவடிக்கை

வியாழன் , டிசம்பர் 24,2015,

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு நாளைமுதல் தண்ணீர் திறந்துவிட, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதன்மூலம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 22 ஆயிரத்து 852 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்குக் கோரிக்கைகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து மணிமுத்தாறு பிரதானக் கால்வாயின் 1, 2, 3 மற்றும் 4-வது பிரிவு பாசன நிலங்களுக்கு, பிசான பருவ சாகுபடிக்கு நாளைமுதல் தண்ணீர் திறந்து விட தாம் ஆணையிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, இராதாபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய வட்டங்களிலுள்ள 22 ஆயிரத்து 852 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.