மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, மார்ச் 01, 2017,

புதுடெல்லி : சென்னையில் பல ஆண்டுகளாக தேக்க நிலையில் இருக்கும் மதுரவாயல் – துறைமுகம் இடையிலான பறக்கும் சாலைத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

டெல்லிக்கு மூன்று நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை அவரது இல்லத்தில் முதல்வர் பழனிசாமி சந்தித்து, மாநில நலன் சார்ந்த முக்கியத் திட்டங்களுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய ஆதரவு குறித்து விளக்கினார். நிலுவையில் உள்ள பல திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, அவர் மத்திய சாலை, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை அவரது அமைச்சகத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். சுமார் ஒரு மணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை முதல்வர் பழனிசாமி சந்தித்தார்.
அப்போது கரூர், விழுப்புரம், நாமக்கல், உதகமண்டலம் ஆகிய நான்கு இடங்களை நகர புனரமைப்பு, மறுநிர்மாணத்துக்கு வகை செய்யும் ’அம்ருத்’ இயக்கத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்; சென்னையில் வடக்கே எண்ணூர் துறைமுகம் மற்றும் தெற்கே மாமல்லபுரம் வரையிலான கிழக்குக் கடற்கரை சாலை ஆகியவற்றை இணைக்கும் புற வட்டச் சாலைகள் திட்டத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும்; சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி முன்வைத்தார்.
பின்னர் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை அவரது அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: தமிழகத்தில் 800 கி.மீ. சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுத்தேன்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புற வட்டச் சாலைத் திட்டத்துக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டேன். அவற்றை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் கூறினார்.
சென்னை மதுரவாயல் – துறைமுகம் திட்டத்தில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய வேண்டியுள்ளது. அதன் பிறகு இத்திட்டப் பணிகளை இணைந்து செயல்படுத்துவதற்கான மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து விரைவில் பணிகள் தொடங்கும்.மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்த போது நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள், பொலிவுறு நகரங்களில் புதிய நகரங்களைச் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னையில் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்த ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டேன். சென்னை நகர போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வட்டச் சாலைத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. அதைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். மத்திய சட்டத் துறை அமைச்சரைச் சந்தித்த போது, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏதுவாக மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்க ஒத்துழைப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்தேன். இதேபோல, ’நீட்’ சட்ட மசோதாவுக்கும் ஒப்புதல் கிடைக்க உதவுமாறும் கேட்டுக் கொண்டேன்’ என்றார் பழனிசாமி.

மத்திய அமைச்சர்களுடனான சந்திப்புகளின் போது தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார், வீட்டு வசதித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாநில தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கூடுதல் தலைமைச் செயலாளர்கள் சண்முகம் (நிதி), ராஜீவ் ரஞ்சன் (நெடுஞ்சாலை),வீட்டுவசதித் துறை முதன்மைச் செயலாளர் பனிந்திர ரெட்டி, திட்டத் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.