மதுரை மாவட்டத்தில் 3,912 பேருக்கு சிறு வணிக கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

மதுரை மாவட்டத்தில் 3,912 பேருக்கு சிறு வணிக கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

ஞாயிறு, பெப்ரவரி 07,2016,

மதுரை மாவட்டத்தில் 3,912 பேருக்கு 1 கோடியே 96 லட்சம் ரூபாய் சிறு வணிக கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

தமிழகத்தில் 2 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு அம்மா சிறு வணிக கடன் உதவி திட்டம் மூலம் ரூ.100 கோடி வழங்கப்படுகிறது. இதற்காக மாநிலத்தில் 32 மாவட்டங்களிலும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு சிறு வியாபாரிகளுக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் இந்த கடன் உதவி திட்டத்தின் தொடக்க விழா மதுரை மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். மண்டல இணைப்பதிவாளர் வெங்கடேசன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரைப்பாணடியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு, சிறு வணிகர்களுக்கான கடன் உதவித்தொகைகளை வழங்கினார். மேலும் மழை வெள்ளத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவியையும் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும் போது கூறியதாவது:-
தமிழக முதல்வர் ஜெயலலிதா பசி என்ற சொல்லை அகராதியில் இருந்து அகற்றி மக்களின் பசிப்பிணியை போக்கி உள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் எந்த ஒரு மனிதனும் பசியால் வாடிய நிலை இல்லை. அது மட்டுமின்றி ஆலயங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் ஏழை மக்கள் மேம்பட வேண்டும் என பல்வேறு திட்டங்களை முதல்வர் வழங்கி வருகிறார். மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தர வேண்டும் என்பதற்காக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த 54 திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறார். கூடுதலாக ஏராளமான புதிய திட்டங்களையும் தந்து அதனை நிறைவேற்றி உள்ளார்.

சாலையோர வியாபாரிகளும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ளும் வகையில் கூட்டுறவுத்துறை மூலம் 2 லட்சம் பேருக்கு ரூ.100 கோடிக்கு சிறு வணிக கடனை முதல்வர் வழங்கி உள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமின்றி தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இந்த கடனுதவி வழங்கப்படுகிறது. ஏழைகள் மீது கரிசனம் கொண்ட முதல்வர் தகுதியுள்ள அனைவருக்கும் இந்த கடனுதவியை வழங்க ஆணையிட்டுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் 7076 முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் விண்ணப்பங்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 787. இதில் 93 ஆயிரத்து 880 பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். அதில் இது வரை 47 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 3,912 பேருக்கு ரூ.1 கோடியே 96 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. மீதமுள்ள தகுதி படைத்த அனைவருக்கும் இந்த உதவி வழங்கப்படும். வட்டியில்லாத இந்த கடன் உதவியை சிறு வியாபாரிகள் பெற்று உரிய முறையில் அதனை திருப்பி செலுத்தவேண்டும். அவ்வாறு திருப்பி செலுத்துபவர்களுக்கு தொடர்ந்து கடன் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். அது மட்டுமல்ல கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் இது வரை இல்லாத அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் 9 ஆயிரத்து 136 கோடி ரூபாய் தான் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 4½ ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பயிர்க்கடனாக மட்டும் ரூ.22 ஆயிரத்து 449 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்காக பாடுபடும் அரசு எது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே வருகிற தேர்தலில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிற்கு என்றும் நன்றி உள்ளவர்களாக இருந்து அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும். மீண்டும் ஜெயலலிதா தமிழகத்தை ஆளுவதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மேயர் ராஜன்செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கையன், கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், கருப்பையா, மாவட்ட நிர்வாகிகள் தங்கம், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.