மனநலன் பாதித்தோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் சாரதா மேனனுக்கு ஒளவையார் விருது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மனநலன் பாதித்தோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் சாரதா மேனனுக்கு ஒளவையார் விருது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , மார்ச் 03,2016,

மனநலன் பாதித்தோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்கார்ஃப் அமைப்பின் நிறுவனர் டாக்டர் சாரதா மேனனுக்கு இந்த ஆண்டுக்கான ஒளவையார் விருது வழங்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவற்றில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒளவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கப்படும் இந்த விருதானது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ்-சால்வை ஆகியன அடங்கியதாகும்.
ஸ்கார்ஃப் அமைப்பு: 2016-ஆம் ஆண்டுக்கான ஒளவையார் விருதுக்கு, அரசு மனநல மருத்துவ நிலையத்தின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும், ஸ்கார்ஃப் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர்-ஆலோசகருமான டாக்டர் ஆ.சாரதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டாக்டர் சாரதா மேனன், மனநலம் தொடர்பாக சிறந்த மருத்துவ சேவை செய்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் மற்றும் மறுவாழ்விற்காக ஸ்கார்ஃப் என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவியவர் ஆ.சாரதா மேனன்.