மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: ராமதாஸ் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்

மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: ராமதாஸ் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்

சனி, ஜனவரி 30,2016,

விதிமுறைகளை மீறி மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, இந்தூர் மற்றும் லக்னோவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு, விதிகளை மீறி அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது.

இந்த புகார் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் ஜெயின் முன்னிலையில் நடைபெற்றது.

விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து இரண்டு முறை விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், அன்புமணி ராமதாஸ் நேற்று நேரில் ஆஜரானார். தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் மனு தாக்கல் செய்தார்.இதன் மீதான விசாரணை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்று நீதிபதி அஜய் குமார் ஜெயின் கூறியுள்ளார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள கூடுதல் ஆவணங்கள் மீதும் விசாரணை நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.