மருத்துவ படிப்பில் 85 சதவீத உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

மருத்துவ படிப்பில் 85 சதவீத உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

ஜூலை ,18 ,2017 ,செவ்வாய்க்கிழமை,

சென்னை : மருத்துவ படிப்பில் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கிய 85 சதவீத இடங்களை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

நீட் எனும் தகுதித் தேர்வால் தமிழக மாணவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ படிப்புக்கான கட் ஆப் மார்க் இருந்த போதும் நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்கள் இல்லாததால் மருத்துவ படிப்பு என்பதே தமிழக மாணவர்களுக்கு இல்லாத ஒன்றாகிவிட்டது. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் மருத்துவ மாணவ சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தோருக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

ஆனால் இந்த ஆணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது.நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் 6 ஆயிரத்து 877 மாநில பாடத்திட்ட பள்ளிகளும், 268 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் உள்ளன. இதில், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 4.20 லட்சம் மாணவர்களும், தமிழ்நாடு தொழில்கல்வி மாணவர் சேர்க்கை சட்டத்தின்படி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஆனால், நடப்பு கல்வியாண்டு முதல் ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் 88 ஆயிரத்து 431 மாணவர்கள் அந்த தேர்வை எழுதியுள்ளனர். இதில், 4 ஆயிரத்து 675 பேர் மட்டுமே சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் ஆவார்கள். மீதமுள்ள 84 ஆயிரம் பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். அதாவது, மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் 95 சதவீதம் பேரும், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் வெறும் 5 சதவீதம் பேரும் ‘நீட்’ தேர்வை எழுதியுள்ளனர்.

எனவே மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 95 சதவீதம் மாணவர்களை குறிப்பாக கிராமப்புற மாணவர்களை கருத்தில் கொண்டே, மருத்துவ படிப்பில் 85 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதுவும், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஒன்றுகூட கிராமப்புறங்களில் இல்லை என்பதால், அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த அரசாணை பிறப்பிக்கவில்லை என்றால், மாநில பாடத்திட்டத்தின் கீழ் சிறப்பாக படித்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். தமிழக அரசு தனக்குள் அதிகாரத்தை பயன்படுத்தியே இந்த அரசாணையை பிறப்பித்துள்ளது. இது அரசின் கொள்கை முடிவு. இதில் கோர்ட்டு தலையிட முடியாது. மாநில அரசுகளுக்கான அதிகாரம் குறித்து ஏற்கனவே ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இவற்றை எல்லாம் தனி நீதிபதி கவனிக்க தவறி விட்டார்.

இந்த தீர்ப்பால், கிராமப்புற மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர். கடந்தாண்டு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் வெறும் 39 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது 15 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அவர்களுக்கு அதிகப்படியான இடங்கள் கிடைக்கும். எனவே, தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.