மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு கூடாது பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு கூடாது பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

புதன், பெப்ரவரி 10,2016,

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
மருத்துவ கல்லூரிகளில் மாணவ-மாணவியர் சேர்க்கைக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்பை, மறுஆய்வு செய்யக்கோரும் மத்திய அரசின் எந்த ஒரு முயற்சியையும் தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி, கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி, தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
பொது நுழைவுத்தேர்வு என்பது, மாநில உரிமைகளை பறிக்கும் வகையிலும், தமிழகத்தின் மருத்துவ கல்லூரிகளில் மாணவ-மாணவியரை சேர்ப்பதற்கான கொள்கைகளை பாதிக்கும் விதத்திலும் அமைந்துவிடும் என நான் ஏற்கனவே எச்சரித்ததோடு, எந்த ஒரு வடிவிலோ, வேறு எந்த பெயரிலோ, பொது நுழைவுத்தேர்வை கொண்டுவரக்கூடாது என உறுதிபட வலியுறுத்தியிருந்தேன்.
மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்துவதை எதிர்த்தும், தமிழக அரசின் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்தும், 30-7-2011, 7-9-2012 மற்றும் 30-9-2012 ஆகிய தேதிகளில் அப்போதைய பிரதமருக்கு தொடர்ந்து நான் கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு ஆகியவற்றுக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்யும் வகையில், இந்திய மருத்துவ கவுன்சிலும், இந்திய பல் மருத்துவ கவுன்சிலும் வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும். இத்தகைய அறிவிக்கை இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
 
கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி, உச்சநீதிமன்றம் வழங்கிய, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு குறித்து தாங்கள் மிக நன்றாக அறிவீர்கள்.
மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு எதிராக, தமிழக அரசு தெரிவித்த அனைத்து ஆட்சேபங்களும், சரியானது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த முக்கிய தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக வரவேற்றனர்.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு மாறாக, அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி, அப்போதைய பிரதமருக்கு நான் மீண்டும் கடிதம் எழுதி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனுவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினேன். தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரும் மத்திய அரசின் மனுவை எதிர்த்து, தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந் தேதி, தங்களிடம் நான் அளித்த மனுவில், மருத்துவ கல்லூரி பொது நுழைவுத்தேர்வு தொடர்பாக, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் உள்ள மறுஆய்வு மனுவை திரும்ப பெற்றுக்கொண்டு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் நான் வலியுறுத்தியிருந்தேன்.
தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதியாகவும், தெள்ளத்தெளிவாகவும் நான் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் கருத்துரு அடிப்படையில், மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், மத்திய அரசின் இதர துறைகளின் கருத்துகளை கேட்டிருப்பதாக, சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பது, எனக்கு மிகுந்த கவலையை அளித்திருக்கிறது.
 
தமிழக அரசு சிறப்பாகவும், நியாயமாகவும், வெளிப்படையான முறையிலும் கடைபிடித்துவரும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கொள்கையினால் மிகுந்த திருப்தியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ள பல்லாயிரக்கணக்கான மாணவ-மாணவியரின் மனதில், இத்தகைய ஊடகச் செய்திகள் புதிய குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களையும் சமநிலைப்படுத்துவதை உறுதிசெய்வதற்கு எண்ணற்ற நடவடிக்கைகளை எனது தலைமையிலான தமிழக அரசு, கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தீவிர ஆலோசனைக்கு பின்னர், இளநிலை தொழிற்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முறை ஒழிக்கப்பட்டது.
 
பொது நுழைவுத்தேர்வில், நகர்ப்புற பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு இணையாக சமூக – பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் போட்டிபோட முடியாத நிலையைக் கருத்தில் கொண்டு, நகர்ப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் பொது நுழைவுத்தேர்வு முறை அமைந்துள்ளது என்ற நிலைப்பாட்டை எனது அரசு கொண்டுள்ளது.
நகர்ப்புறங்களில் கிடைக்கும் பொது நுழைவுத்தேர்வுக்கான பாடங்கள், கிராமப்புறங்களில் கிடைக்காது என்பதும், நகர்ப்புறங்களில் உள்ள பயிற்சி வகுப்புகள், பயிற்சி நிறுவனங்கள் போன்ற வசதிகள், கிராமப்புற மாணவர்களுக்கு இருக்காது என்பதும், கிராமப்புற மாணவர்களுக்கு பின்னடைவாக அமையும் பொது நுழைவுத்தேர்வு முறையை ஒழித்து எடுக்கப்பட்ட முடிவின் காரணமாக, கிராமப்புறங்களைச் சேர்ந்த சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த, கல்வியில் சிறந்து விளங்கிய ஏராளமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
 
முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளைப் பொறுத்தவரை, கிராமப்புறங்களிலும் அதிலும், குறிப்பாக மலை மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் பணியாற்றுவோருக்கு, தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன்மூலம், மலைப்பகுதி போன்ற தொலைதூரப் பகுதிகளிலும் மருத்துவர்களின் சேவை உறுதிசெய்யப்படுவதுடன், அந்த பகுதிகளில் தரமான ஆரம்ப சுகாதார சிகிச்சையை அளிக்கவும் ஏதுவாகிறது.
அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களின் தேவையை எதிர்கொள்வதற்கு உதவும் வகையில், முதுநிலை மருத்துவ கல்வியை நிறைவு செய்யும் மருத்துவர்கள், மாநில அரசு மருத்துவ கல்லூரிகளில் குறிப்பிட்ட காலத்திற்கு பணியாற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தை தமிழக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது. என்.இ.இ.டி. அல்லது எந்த ஒரு பொது நுழைவுத்தேர்வையும் அறிமுகப்படுத்துவதால், தமிழக அரசின் இதுபோன்ற முற்போக்கு கொள்கை பயனற்றுப் போவதுடன், மாநில அரசின் சமூகபொருளாதார நோக்கங்களையும் தடுப்பதாக அமையும். மேலும், தமிழக அரசின் நிர்வாக தேவைகளையும், சமூகபொருளாதாரச் சூழலையும் இந்த தேசிய நுழைவுத்தேர்வு பாதிக்கும்.
தமிழக அரசு எதிர்க்கும்
பொது நுழைவுத்தேர்வு தொடர்பாக, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு நிலுவையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு, என்.இ.இ.டி. தேர்வை அறிமுகப்படுத்தும் திட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற முடியாத நிலையை உருவாக்கும்.
எனவே, தமிழக அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், மாநில அரசின் மருத்துவ கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை கொள்கைக்கு முரணாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில், மத்திய அரசு என்.இ.இ.டி. அல்லது வேறு எந்த பெயரிலோ, வகையிலோ அறிமுகப்படுத்தும் முயற்சிகளை, தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்பதை தங்களின் கவனத்திற்கு மீண்டும் கொண்டுவருகிறேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.