மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் : பேரவைத் தலைவர் தனபால் அறிவிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இன்று சட்டப்பேரவையில்  இரங்கல் : பேரவைத் தலைவர் தனபால் அறிவிப்பு

செவ்வாய், ஜனவரி 24,2017,

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆளுநர் உரை முடிந்ததும் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. அதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடியது.

இதில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துரை முருகன், பொன்முடி, காங்கிரஸ் சார்பில் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேரவைத் தலைவர் பி.தனபால் கூறியதாவது:

இன்று (நேற்று) மாலை மீண்டும் அவையை கூடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலுக்காக அவசரச் சட்டத்தை நிறைவேற்ற அரசு விரும்புவதால் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. அவசரச் சட்டம் சட்டமாக இதில் மாற்றப்படுகிறது.

அதைத் தொடர்ந்து 23-ம் தேதி (இன்று) பேரவை தொடங்கியதும் முன்னாள் உறுப்பினர்கள் கோ.சி.மணி உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா, பத்திரிகை ஆசிரியர் சோ.ராமசாமி, கர்நாடக இசைக்கலைஞர் எம்.பாலமுரளி கிருஷ்ணா, கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தெரி விக்கப்படும்.

அதன்பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசுவர். இரங்கல் தீர்மானம் முடிந்ததும் அவை ஒத்திவைக்கப்படும்.

ஜனவரி 25, 26 தேதிகளில் பேரவைக்கு விடுமுறை. பேரவை மீண்டும் 27-ம் தேதி கூடுகிறது. அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீது விவாதம் தொடங்கும். 28,29 (சனி, ஞாயிறு) பேரவைக் கூட்டம் இல்லை. 30, 31-ம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும். 31-ம் தேதி, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பேசுவர். விவாதத்துக்கு பதிலளித்து பிப்ரவரி 1-ம் தேதி முதல்வர் பேசுவார். அதன்பின், 2016-17ம் ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல், மானிய கோரிக்கை வாக்கெடுப்பு, கூடுதல் செலவினங்களுக்கான சட்ட முன்வடிவுகள் விவாத மின்றி வாக்கெடுப்பு மூலம் நிறை வேற்றப்படும். அரசு தீர்மானங் கள் இருந்தால் எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுவதுடன் கூட்டம் நிறைவுபெறும்.

பேரவை தினமும் காலை 10 மணிக்கு கூடும், அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு பேரவைத் தலைவர் தனபால் தெரிவித்தார்.