மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தில் மரம் நடும் பெருந்திட்டம் : ஆளுநர் வித்யாசாகர் அறிவிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தில் மரம் நடும் பெருந்திட்டம் : ஆளுநர் வித்யாசாகர் அறிவிப்பு

செவ்வாய், ஜனவரி 24,2017,

சென்னை; மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி, மரம் நடும் பெருந்திட்டம் தொடங்கப்படும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் நேற்று  ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆற்றிய உரையின் விவரம்:-

2015-ஆம் ஆண்டு டிசம்பரில் பெய்த பெருமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிலிருந்து சிறப்பாகவும், வேகமாகவும் தமிழகம் மீண்டு வந்தது. இந்த நிலையில், வர்தா புயலின் கோர தாண்டவத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளன.

இந்தப் புயல் லட்சக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்து, போக்குவரத்தை கடுமையாகப் பாதித்ததுடன், மின்சார விநியோகம்-தொலைத் தொடர்புக் கட்டமைப்பு வசதிகளையும் நிலை குலைய வைத்தது. தாற்காலிக மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ.1,972.89 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கக் கோரியும், நிரந்தரக் கட்டுமானப் பணிகளுக்காக ரூ.20 ஆயிரத்து 600 கோடியை அளிக்கவும் மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை அளித்துள்ளார்.
இதனை உடனடியாகப் பரிசீலித்து நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். சென்னை, அதனையடுத்துள்ள மாவட்டங்களில் அரசு-தனியார் நிலங்களில் இருந்த பெரும்பாலான மரங்கள் வர்தா புயலால் வேரோடு சாய்க்கப்பட்டும், பாதிப்புக்கும் உள்ளாகின.

அரசு நிலங்களில் மரங்களை நடுவதற்கும், தனிநபர்கள்-தனியார் நிறுவனங்களில் மரம் நடுவதை ஊக்கப்படுத்துவதற்கும் ஒரு மாபெரும் பசுமைத் திட்டத்தை இந்த அரசு தொடங்க உள்ளது.
மரங்கள் நடுவது, பசுமைப் பரப்பை அதிகரிப்பது போன்றவை தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உள்ளம் கவர்ந்த பணியாகும். எனவே, இந்த மரம் நடும் பெருந்திட்டம் அவரது 69-வது பிறந்த தினமான வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.