மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 24, 2017,

சென்னை  : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெடங்கி வைக்கிறார்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தினத்தை ஒட்டி, 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்திலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று, விழா மலரை வெளியிடுகிறார்.

மேலும், அதிக அளவில் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பது, நலத்திட்ட உதவி வழங்குவது, தமிழகம் முழுவதும் மரங்கள் நடுவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, இன்று ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. ஜெயலலிதா பிறந்தநாளை உற்சாகத்துடன் சிறப்பாக கொண்டாடவேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன. சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.