மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.15 கோடியில் நினைவு மண்டபம் ; அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.15 கோடியில் நினைவு மண்டபம் ; அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

ஞாயிறு, டிசம்பர் 11,2016,

முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்கு “பாரத ரத்னா” விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை, நாடாளுமன்ற வளாகத்தில் முழு திருவுருவ வெண்கலச் சிலை அமைப்பதற்கு கோரிக்கை, நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 15 கோடியில் நினைவு மண்டபம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, தாய்மையின் வடிவமாய், தமிழினத்தின் வரைபடமாய், தனிமனித ராணுவமாய், தாயுருவத் தெய்வமாய், புரட்சிகளின் புகலிடமாய், பொன்மனத்தின் முதலிடமாய் வாழ்ந்த தமிழ்நாட்டின் தங்க சரித்திரமான மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமைச்சரவைக் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்கு “பாரத ரத்னா” விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதற்கும், நாடாளுமன்ற வளாகத்தில் முழு திருவுருவ வெண்கலச் சிலை அமைப்பதற்கு மத்திய அரசிடம் கோருவதற்கும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 15 கோடியில் நினைவு மண்டபம் அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் என்பதை பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா செல்வி ஜெ ஜெயலலிதா நினைவிடம் என பெயர் மாற்றம் செய்யவும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.