மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் விடிய விடிய மக்கள் வெள்ளம் ; மலர் தூவி மக்கள் கண்ணீர் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் விடிய விடிய மக்கள் வெள்ளம் ; மலர் தூவி மக்கள் கண்ணீர் அஞ்சலி

வியாழன் , டிசம்பர் 08,2016,

சென்னை : மெரீனா கடற்கரையில் அலைகடலென திரண்ட மக்கள்,மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். குணமடைந்து வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 5-ம் தேதி மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. பின், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு அவர் காலமானார். அவரது உடல் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், முன்னாள் பிரதமர் தேவகவுடா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, கேரளா, கர்நாடகா, டில்லி, புதுவை, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், வர்த்தக பிரமுகர்கள், சென்னையில் உள்ள பல்வேறு நாட்டு தூதரக அதிகாரிகள் முதல்வரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, 6-ம் தேதி மாலை 4.27 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் இறுதி சடங்குக்காக ராஜாஜி ஹாலில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இதையடுத்து, 60 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் 6.05 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொண்டர்கள் அஞ்சலி

மறைந்த முதல்வர்  ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் மாலை தொடங்கிய இந்த அஞ்சலி இரவு வெகுநேரம்வரை நீடித்தது. ஜெயலலிதா மறைவையொட்டி தமிழகம் முழுவதும் போக்குவரத்து முடக்கியதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வர முடியாமல் தவித்தவர்கள் வெளியூரிலிருந்து நேற்று அதிகாலை முதலே குவிந்தனர். இவர்கள் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் மட்டுமில்லாது, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல மாநிலங்களை சேர்ந்தவர்களும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் கற்பூரம் ஏற்றியும், மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

பால் ஊற்றி வழிபாடு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் பால் ஊற்றியும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எங்கள் அம்மாவிற்கான இறுதி அஞ்சலி. இதை யாரும் தடுக்க கூடாது என்று கூறி பலரும் கதறி அழுதனர்.

மொட்டை அடித்து அஞ்சலி

மறைந்த முதல்வர்  ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் முன்பாக மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்திய தொண்டர்கள். நினைவிடத்தில் இருந்து நேராக போயஸ் தோட்டத்திற்கு சென்று ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை பார்த்து கண்ணீர் மல்க அழுது விட்டு சென்றனர். அம்மா இல்லாத தமிழ்நாட்டை எங்களால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று பலர் துக்கம் தாளாமல் தெரிவித்தனர்.  ஆண்டிப்பட்டி அ.தி.மு.க எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் தலைமையில், தேனி மாவட்ட அ.தி.மு.க.வினர் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா நினைவிடத்தில் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர். இதே போன்று பசும்பொன் மக்கள் கழக நிறுவனதலைவர் இசக்கிமுத்து தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளும் மொட்டை அடித்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

வெளிநாட்டினர் புகழாரம்

ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்துவதை நேற்று மெரினா கடற்கரைக்கு வந்திருந்த வெளிநாட்டு பயணிகள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இதுபோன்ற நிகழ்வுகளை எங்கள் நாட்டில் கண்டது இல்லை எனவும் அவர்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர். மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றி தங்களுக்கு தெரியும் என்றும், அவர் இரும்பு பெண்மணி எனவும் புகழாரம் சூட்டினர். எம்.ஜி.ஆர் சமாதி அருகே,மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் அங்கும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.