மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து அஞ்சலி

ஞாயிறு, டிசம்பர் 18,2016,

சென்னை ; மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜெயலலிதா நினைவிடத்தில்  அஞ்சலி செலுத்த வந்தவர்களில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு மொட்டை போட்டிருக்கிறார்கள்.கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆண்களும், பெண்களும் நீண்ட கியூவில் நின்று அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த 5–ந்தேதி மரணமடைந்தார். அவரது உடல் மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 6–ந்தேதி அன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் லட்சோப லட்சம் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். 7–ந்தேதி முதல் ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்களும், தொண்டர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஜெயலலிதாவுக்கு 15 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் அரசு சார்பில் கட்டப்படுகிறது. இப்போது அவரது நினைவிடத்தில்  அழகான பெரிய கூரை அமைக்கப்பட்டு அவர் அடக்கம் செய்யப்பட்ட  இடம் தினசரி மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. அங்கு அவரது பெரிய புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில்இன்று முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது தேனி மாவட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர். அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று  மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. நிர்வாகிகளும் உடனிருந்தனர்.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வைரமுத்து மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்களுடன் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக கடற்கரை சாலையில் இருந்து மலர்வளையம் வைத்து அமைதியாக ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.