மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சின்னத்திரை கலைஞர்கள் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சின்னத்திரை கலைஞர்கள் அஞ்சலி

திங்கள் , டிசம்பர் 19,2016,

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சின்னத்திரை கலைஞர்கள் பேரணியாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே கடந்த 6-இல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், அதிமுகவினர் ஆயிரக்கணக்கில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னை உள்பட பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் நினைவிடத்தில் குவிந்தனர். கட்சித் தொண்டர்கள் மொட்டையடித்தும், பெண்கள் கூட்டமாக வந்தும் தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.

இதேபோல், சின்னத்திரை கலைஞர்கள் சங்கத்தினர் சென்னைப் பல்கலைக்கழகம் முன்பு இருந்து பேரணியாக புறப்பட்டுச் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது, “அம்மா மறையவில்லை என்றும் நலத்திட்டங்கள் மூலம் நம் அனைவரது உள்ளங்களிலும் நிறைந்துள்ளார்’ எனக் கலைஞர்கள் புகழாரமும் சூட்டினர்.

இந்த நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் அனைவருக்கும் காலை முதல் இரவு வரையில் 3 வேளையும் கட்சி நிர்வாகிகளின் ஏற்பாட்டின்பேரில் குடிநீர், உணவுப் பொட்டலமும் வழங்கப்படுகிறது. அதேபோல், பல்வேறு தனி நபர்கள் மூலமும் அன்னதானம் அளிக்கப்பட்டு வருகிறது.