மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

வெள்ளி,ஜனவரி 6,2017,

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக் கோரி மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தி தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி. கோஸ், ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தியின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஷ்ரவண் குமார், “ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. எனவே, ஜெயலலிதாவின் மரணம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றார்.

சசிகலா புஷ்பா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சதீஷ் தம்தா வாதிடுகையில், “ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ போன்ற சுதந்திரமான அமைப்போ, நீதிபதிகள் குழுவோ விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் நிலுவையில் உள்ளன. உங்களுக்கு ஏதாவது குறையிருந்தால் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள். அதைத் தவிர்த்து அரசியல் அமைப்புச் சட்டம் 32-ஆவது பிரிவின் கீழ் இந்த மனுக்களை எவ்வாறு தாக்கல் செய்ய முடியும்? இந்த விவகாரத்தில் நாங்கள் என்ன செய்ய முடியும்? இதேபோன்ற மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்க முகாந்திரம் இல்லை. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மேலும் அழுத்தம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்’ என்றனர்.