மறைந்த முதல்வர் ஜெயலலிதா பகைவரின் பாராட்டையும் பெற்றவர் ; மத்திய மந்திரி வெங்கையா நாயுடு புகழாரம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பகைவரின் பாராட்டையும் பெற்றவர் ; மத்திய மந்திரி வெங்கையா நாயுடு புகழாரம்

வியாழன் , டிசம்பர் 08,2016,

சென்னை ; நண்பர்களின் பாராட்டை மட்டுமல்ல, பகைவர்களின் பாராட்டையும் பெற்றவர் ஜெயலலிதா என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாடு, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மந்திரி எம்.வெங்கையா நாயுடு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது அவரது பகைவர்களுக்கு மட்டுமல்ல அவரின் நண்பர்களுக்கும் அவரிடம் பயம் உண்டு. அதோடு அவரது நண்பர்களின் பாராட்டை மட்டுமல்ல பகைவர்களின் பாராட்டையும் பெற்றவர் ஜெயலலிதா. ஆணாதிக்கம் கொண்ட மிகக் கடுமையான அரசியல் அரங்கத்திலும் புகழின் உச்சியை ஜெயலலிதா பெற்றிருக்கிறார் என்பது சாதனை என்பதை விட மேலானது.

உறுதியான தீர்மானமும் அதன் மீதான அர்ப்பணிப்பும் அவருக்கு இருந்தது. இப்படி இருந்தால், தமிழக மக்களுக்கு சேவையாற்றும் தனது இலக்கை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை ஜெயலலிதா நிரூபித்ததோடு, தமிழகத்தை வெவ்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாகவும் மாற்றிக் காட்டினார்.

அவரது ஆளுமைத் தன்மை கவர்ந்திழுக்கக் கூடியது. அதன் மூலம் நாட்டின் புகழ் பெற்ற அரசியல் தலைவர்களில் ஒருவராக மக்களின் இதயத்தில் குடியேறினார். ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் அவருக்காக கதறி அழுததைப் பார்க்கும்போது, அவரிடம் மக்கள் எவ்வளவாய் பாசம் வைத்திருந்தனர் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

கடுமையான பாதைகளைக் கொண்ட அரசியலில் புகுந்தது முதல், அரசியல் ரீதியான பல்வேறு போராட்டங்களை தைரியத்துடன் எதிர்கொண்ட ஜெயலலிதா, கடந்த சில மாதங்களாக தனது உடல் நலன் தொடர்பான போராட்டத்தில் மட்டும் தோற்று டிசம்பர் 5–ந் தேதி மரணத்தை தழுவினார். அவரது மரணம், ஒட்டு மொத்த இந்தியாவை புலம்பச் செய்ததோடு, அவர் மீது அன்பு கொண்டிருந்த ஆதரவாளர்கள், அ.தி.மு.க. கட்சியினர், தலைவர்கள் போன்றவர்களை கடுமையான அதிர்ச்சிக்குள் ஆழ்த்திவிட்டது.

பல ஆண்டுகளாக ஜெயலலிதாவை நான் அறிவேன். அவர் ஒரு மிகச் சிறந்த தலைவராக இருந்தார். தமிழக மக்களின் நலனை பாதுகாப்பதிலும், அவர்களுக்கு சேவை செய்வதிலும் ஜெயலலிதா துணிச்சல் மற்றும் தைரியத்துடன் முன்னிலையில் நின்றார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்படும் தடைகளைக் கண்டு, அதிலிருந்து விலகவோ அல்லது சமரசம் செய்து கொள்ளவோ விரும்பியது இல்லை. அவர் தேர்வு செய்த பாதையில் வெற்றிகரமாக நடைபோட்டார்.

அவரிடம் அணையாத உத்வேகமும், கடைசி வரை போராடும் குணமும் இருந்தது. அவர் இறப்பதற்கு முந்தைய நாளில்கூட ஏறக்குறைய இயல்பான நிலையை எட்டி, ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்குப் போக திட்டமிட்டு இருந்தார். அவர் இயல்பு நிலைக்குத் திரும்பி மீண்டும் துடிப்பான தனது அரசியல் வாழ்க்கைக்கு திரும்புவார் என்றே நம்பி அவரை வாழ்த்தினர். ஆனால் மாரடைப்பு வந்த நிலையில் நம்மிடம் இருந்து விதி அவரை பிரித்துச் சென்றுவிட்டது.

சமுதாயத்தில் பின்தங்கியவர்களின் குரலாக ஜெயலலிதா ஒலித்தார். அதிகாரம் இல்லாதவர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளித்தார். யாரோ சொன்னது போல, தமிழக மக்களுக்காக குறிப்பாக அடித்தட்டு மக்களுக்காக பல திட்டங்களைக் கொண்டு வந்து, அவர்களுக்காக வாழ்ந்தது மட்டுமல்ல சாகவும் செய்தார். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்ட வடிவம் கிடைப்பதற்கு ஜெயலலிதா உறுதுணையாக இருந்தார்.

ஏழைகளுக்கு உணவளிக்கும் அம்மா உணவகம் திட்டம் மிகப் பிரபலமாகி அடுத்த மாநிலத்திலும் பின்பற்றும் அளவுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அவரது நலத்திட்டங்கள் அனைத்தும் நீண்ட நாட்கள் நினைவில் இருக்கும்.

ஆணாதிக்கம் அதிகம் உள்ள இந்த சமுதாயத்தில் பெண்களின் வேதனைகளை மனதில் கொண்டு அவற்றை நேர்மறையாக தீர்ப்பதில் சவாலாக இருந்தார். திராவிட இயக்கத்தில் வந்தவர் என்பதாலும், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், பிற்படுத்தப்பட்டவர்களையும், அடித்தட்டு மக்களையும் முன்னேற்றுவதில் உறுதி காட்டினார். பா.ஜ.க.வுடன் தேர்தலில் அ.தி.மு.க. எதிர்த்து போட்டியிட்டாலும், அந்த கட்சிகளிடையே பல்வேறு அரசியல் வித்தியாசங்கள் காணப்பட்டாலும், சித்தாந்த ரீதியில் பா.ஜ.க.வுடன் ஜெயலலிதா ஒத்திசைந்திருந்தார்.

தேர்தல் கூட்டணி குறித்து என்னிடம் பேசியபோது, எதிர்ப்பலை இருப்பதால் வெற்றி தோல்விக்கான இடைவெளி மிகக் குறுகலாகத்தான் இருக்கும் என்றும், எனவே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால், அதை எதிர்க்கட்சிகள் திசை திருப்பி மக்களின் ஒரு பாகத்தினரை திசை திருப்பிவிடக் கூடும் என குறிப்பிட்டார். எனவே தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை விரும்புவதால், தேசிய பிரச்சினைகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பேன் என்று என்னிடம் உறுதி அளித்தார். அந்த வார்த்தையை அவர் பல சந்தர்ப்பங்களில் காப்பாற்றினார். தொழிற்சாலைகளுக்கு எதிராக இருக்கக்கூடும் என்று ஆரம்பத்தில் எதிர்ப்பு காட்டினாலும், சேவை வரி மசோதா விவகாரத்தில் என்னிடமும் மத்திய மந்திரி அருண் ஜெட்லியிடமும் அளித்த வாக்குறுதியை ஜெயலலிதா நிறைவேற்றினார். காவிரி விவகாரத்தையும் தமிழக மீனவர் பிரச்சினைகளையும் மத்திய அரசிடம் அவர் வலிமையுடன் எடுத்துச் சொன்னார்.

அரசு திட்டங்கள் மூலம் என்னுடன் அவர் தனிப்பட்ட முறையில் பழகி இருந்தாலும், அவர் கலந்து கொண்ட கடைசி இரண்டு மெட்ரோ ரெயில் நிகழ்ச்சிகளிலும் (கடந்த ஜூலை 29 மற்றும் செப்டம்பர் 20–ந் தேதி) என்னுடன் அவர் பங்கேற்றது குறிப்பிடத் தக்கது. அதுவும் காய்ச்சலால் அவதியுற்ற நிலையிலும் காணொலிக் காட்சி மூலம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக கூறியிருந்தார். பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகி என்ற முறையில் பலமுறை போயஸ் தோட்ட இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் தெலுங்கு மொழியில் பேசி என்னுடன் மிகுந்த பாசம் காட்டுவார்.

மத்திய அரசில் நான் தமிழகத்தின் நண்பர் என்று அவர் தன்னை எப்போதும் வெளிப்படையாகக் கூறுவார். தேர்தலுக்காக சீட் ஒதுக்கும் விவகாரத்தில் மிக உறுதியாக இருப்பார். உண்மை மற்றும் யதார்த்த நிலைகளைச் சுட்டிக்காட்டி சமாதானப்படுத்துவார். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் எதிரிகளை எதிர்ப்பதில் ஜெயலலிதா பிடிவாதமாக இருப்பார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவர் அவமானப்படுத்தப்பட்டாலும், அதையெல்லாம் புறந்தள்ளி, எதிரிகளை எதிர்ப்பதில் மிகுந்த உறுதி காட்டினார்.

கடின உழைப்பு, அறிவுக்கூர்மை, திறமைகள் மூலம் திரைப்படத் துறையிலும் அரசியலிலும் அழிக்க முடியாத வெற்றிகளை அவர் தடம் பதித்துச் சென்றுள்ளார். ஒரு பெண் எப்படி தனது லட்சியத்தை அடைய முடியும் என்பதை அர்ப்பணிப்பு, உறுதியான தீர்மானம் மூலம் காட்டிச் சென்றிருக்கிறார். இதற்கு அவரே மிகச் சிறந்த உதாரணம்.

சில நேரங்களில் அவருக்கு எதிராக கோர்ட்டுகள் தீர்ப்பளித்தாலும், ஜெயலலிதா மீது மக்கள் வைத்திருந்த பக்தி குறையவில்லை. பின்விளைவுகளைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டதில்லை. ஜெயலலிதாவுக்காக கோவில்கள், ஆலயங்கள், மசூதிகளில் மக்கள் செய்த பிரார்த்தனைகளைப் பார்க்கும்போது, எல்லாரிடமும் அவர் சம அளவு புகழை கொண்டிருந்தார் என்பதே உண்மை. கீழ்த்தட்டு மக்களுக்காக அவர் கொண்ட கவலையும், காட்டிய அக்கறையும் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு நிறுத்தின.

ராஜாஜி அரங்கத்தில் அவரது உடலை பார்த்து மக்கள் மார்பில் அடித்து அழுததை கண்டேன். யாருடனும் ஒப்பிட முடியாத தலைவர் என்பதையும், அவர்தான் மக்களின் உண்மையான அம்மா என்பதையும் நான் கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் கொண்டிருந்த வளம், அவரை மிக சிறந்த சொல்வன்மையாளராக நிலை நிறுத்தியது. ஜெயலலிதா உண்மையிலேயே புரட்சி தலைவிதான். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.