மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில்,முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தீபா ஆதரவு : இரு கரங்களாக செயல்படுவோம் என அறிவிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில்,முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தீபா ஆதரவு : இரு கரங்களாக செயல்படுவோம் என அறிவிப்பு

புதன்கிழமை, பிப்ரவரி 15, 2017,

சென்னை : முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், நானும் (தீபா) இருகரங்களாகச் செயல்படுவோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் இணைந்து மேற்கொள்வோம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்றிரவு மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அறிவித்தார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சென்னை தி.நகரில் வசிக்கிறார். ஜெயலலிதா மரணத்தையடுத்து அவரை அதிமுகவுக்கு தலைமை ஏற்க வரவேண்டும் என்றும் புதிய கட்சியை தொடங்க வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்கள் தினமும் சந்தித்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதனால் அவர் புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் சசிகலா முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியே வந்து பரபரப்பு பேட்டியளித்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சென்றார். அங்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அப்போது வருகை தந்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தந்தார். அப்போது பேட்டியளித்த தீபா, முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவேன் என்று தெரிவித்தார். முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், தீபாவின் இந்த திடீர் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அ.தி.மு.க தலைவர்களை தீபாவுக்கு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அறிமுகம் செய்து வைத்தார்.அதைத் தொடர்ந்து அரசியலுக்கு வருவதாக தீபா தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை மெரீனா கடற்கரையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு தீபா சென்றார். அவரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி ஆரத்தி எடுத்து வரவேற்று அழைத்துச் சென்றார். தீபாவுடன் அவரது ஆதரவாளர்களும் வந்திருந்தனர்.