மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கை அரசு நாளிதழ்கள் தலையங்கம் எழுதி புகழஞ்சலி

மறைந்த  முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கை அரசு நாளிதழ்கள் தலையங்கம் எழுதி புகழஞ்சலி

வியாழன் , டிசம்பர் 08,2016,

மறைந்த  முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கை அரசு நாளிதழ்கள் தலையங்கம் எழுதி புகழஞ்சலி செலுத்தியுள்ளது.

தமிழகத்தின் பெரும் தலைவர் மறைந்த  முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து இலங்கையின் அரசு நாளிதழான ‘டெய்லி நியூஸ்’ தலையங்கம் தீட்டியுள்ளது.

“தமிழகத்தின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது” என்று ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை விதந்தோதி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

கொழும்புவின் மைய நீரோட்ட ஆங்கில மற்றும் சிங்கள பத்திரிகைகள் ஜெயலலிதாவின் “இலங்கைக்கு எதிரான” போக்கிற்காக அவரை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் அரச ஊடகமான டெய்லி நியூஸ் அவரை புகழ்ந்து தலையங்கம் தீட்டியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துச் செல்ல வேண்டிய கடினமான பணி காத்திருப்பதாகவும் அந்தத் தலையங்கம் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் 2009-ல் முடிந்த பிறகே தமிழகத்தில் இலங்கைப் பிரச்சினை தேர்தல் விவகாரமாக பெரிய அளவில் உருவெடுக்காத நிலையில் ஜெயலலிதா தனது முந்தைய தனி ஈழத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றி கொண்டு தனி ஈழத்திற்காக தீர்மானம் நிறைவேற்றியதை இந்த தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அவரது மக்கள் நலத்திட்டங்களான அம்மா உணவகம், பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மற்றும் பிற இலவசங்களின் அறிவிப்பையும் புகழ்ந்து சித்தரித்துள்ளது இந்தத் தலையங்கம்.

“மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்த ஜெயலலிதாவை பலரும் தனிமனித வழிபாட்டை பெருக்கியவர் என்று விமர்சனம் செய்தனர். ஆனாலும் கட்சி வேறுபாடின்றி, சாதி மத பேதமின்றி பலரும் ஜெயலலிதாவை நேசித்துள்ளனர். இது அப்போலோ மருத்துவமனைக்கு வெளியே நின்றிருந்த தொண்டர்கள் கூட்டத்தைக் கொண்டு புரிந்து கொள்ள முடிகிறது” என்று அந்தத் தலையங்கம் கூறுகிறது.

செவ்வாயன்று இலங்கையின் அனைத்து செய்தித்தாள்களிலும் ஜெயலலிதா மறைவு பற்றிய செய்தி முதல் பக்கங்களில் வெளியானது.

ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், ஜெயலலிதாவின் அரசியல் கொள்கைகளை விட ஒரு பெண்ணாக அவரது தைரியமும் தன்னம்பிக்கையுமே பெரிய அளவில் கவர்ந்ததாகவும் தனிநபராக அவர் ஒவ்வொரு பிரச்சினையையும் எதிர்கொண்டு மீண்டது தனித்துவமானது என்றும் புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.