மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ; குடியரசுத் தலைவரிடம் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ; குடியரசுத் தலைவரிடம் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புதன்கிழமை, மார்ச் 01, 2017,

புதுடெல்லி : தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால் அது தொடர்பாக மத்திய அரசு மூலம் நீதி விசாரணையோ அல்லது மத்திய புலனாய்வுத் துறை விசாரணையோ நடத்த உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு அணி அதிமுக எம்.பி.க்கள் குழு நேற்று நேரில் வலியுறுத்தியது.

இதுதொடர்பாக அவர்கள் தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் நேற்று பிற்பகல் 1.40 மணிக்கு சந்தித்து 14 பக்க மனுவை அளித்தனர்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் டாக்டர் மைத்ரேயன் கூறியதாவது :- முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பரில் காலமானார். அவரது மரணம் இயற்கையானதா? அல்லது மர்மம் நிறைந்ததா? என்பதில் தமிழகத்தில் உள்ள அதிமுக அடிமட்டத் தொண்டர்கள், பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அவரது போயஸ் இல்லத்திலேயே அவசர மருத்துவ சிகிச்சை (ஐசியு) வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் இருப்பதாகக் கூறி அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டது ஏன்?

அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 75 நாள்கள் சிகிச்சை பெற்றார். அப்போது அவரைப் பார்க்க மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஜெயலலிதாவின் குடும்ப உறவினர்கள் யாரையும் அனுமதிக்காதது ஏன்?

தற்காப்பு வசதிகளுடன் ஒரு நோயாளியை சிறிது நேரம் பார்க்க முடியும் என்பது புற்றுநோய் மருத்துவ நிபுணர் என்ற முறையில் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், மிகப் பெரிய தலைவராக இருந்த ஜெயலலிதாவை தமிழக ஆளுநர் உள்பட யாரையுமே பார்க்க அனுமதிக்கவில்லை. இதுதான் பல்வேறு சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் எழுப்புகிறது.

ஜெயலலிதாவின் மரணம், அவர் 75 நாள்கள் மருத்துவமனையில் இருந்த போது அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள், மருத்துவமனையில் சேர்க்கப்படும் முன்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி போயஸ் தோட்டத்தில் அவருக்கு என்ன நடந்தது? அதற்கு முன்பு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி விரிவான நீதி விசாரணை அல்லது மத்திய புலனாய்வுத் துறை அல்லது சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசுக்கு பரிந்துரைக்குமாறு குடியரசுத் தலைவரை கேட்டுக் கொண்டோம்.

நாங்கள் அளித்த 14 பக்க மனுவை குடியரசுத் தலைவர் முழுமையாகப் படித்தது, ஜெயலலிதா மீதான அவரது அக்கறையை வெளிப்படுத்துவதாக இருந்தது. இதனால், உரிய விசாரணைக்கு உத்தரவிடும் அறிவுறுத்தலை மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மைத்ரேயன்.

இந்தச் சந்திப்பின் போது, நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள் பி.ஆர். சுந்தரம் (நாமக்கல்), ஆர்.கோபாலகிருஷ்ணன் (மதுரை), ஏ.அசோக்குமார் (கிருஷ்ணகிரி), ஆர்.பார்த்திபன் (தேனி), சத்யபாமா (திருப்பூர்), வனரோஜா (திருவண்ணாமலை) உள்ளிட்ட 11 பேர் உடனிருந்தனர்.