மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் ; ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் ; ஓ.பன்னீர்செல்வம்

திங்கட்கிழமை, மார்ச் 06, 2017,

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டாக்டர் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, க.பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.சி.டி.பிரபாகர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–

 மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதா நம்மைவிட்டு பிரிந்தாலும், நமது இதயங்களில் நாம் இறக்கும்வரை நிலையாக இருப்பார்.அம்மா எந்த நோக்கம், கொள்கைக்காக செயல்பட்டு இந்த இயக்கம் மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும் என நினைத்தாரோ அதன்படி செயல்படுபவர்கள் தான் இந்த இயக்கத்தின் உண்மையான தொண்டர்கள்.

தமிழகத்தில் உள்ள 7½ கோடி மக்கள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் இந்த தர்மயுத்தத்துக்கு ஆதரவு தருகிறார்கள். இந்த இயக்கம் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டதே ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி இருக்கக்கூடாது என்பதற்காகத் தான். ஜெயலலிதாவும் இதே நோக்கத்துடன் தான் காப்பாற்றி வளர்த்து வந்தார். ஆனால் அதற்கு இப்போது இடையூறு வந்துள்ளது.

நான் 2 முறை முதலமைச்சராக இருந்தபோது, அம்மா உயிரோடு இருந்தார். அவரின் ஆலோசனைப்படி நான் நிம்மதியாக பணியாற்றி வந்தேன். இப்போது, ஒரு குடும்ப ஆதிக்கத்தின் கீழ் முதலமைச்சர் சுதந்திரமாக பணியாற்ற முடியாது என்று எண்ணி வேண்டாம் என்றேன். இல்லை இப்போது நீங்கள் முதலமைச்சராக இருந்தால் தான் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற முடியும் என்றார்கள்.

ஏற்கனவே அம்மா கொண்டுவந்த திட்டங்களை செயல்படுத்தினாலே மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெறலாம் என்று எண்ணி இருந்தேன். நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. ‘வார்தா’ புயல் பாதிப்பில் இருந்து மீண்டது, வறட்சி நிதியை அறிவித்தது, ஜல்லிக்கட்டுக்காக சட்டம் கொண்டுவந்தது போன்றவை தான் நாம் செய்த செயல்கள். இதுதான் பிரச்சினைக்கு மூலகாரணமாக அமைந்தது.

2011–ல் சசிகலா உள்பட அந்த குடும்பத்தில் இருந்து 16 பேரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார் அம்மா ஜெயலலிதா. அதன் பிறகு, சசிகலா கொடுத்த மன்னிப்பு கடிதத்தில், ‘‘என் குடும்பத்தினர் அக்காவுக்கு எதிராக சதி செய்வதை நான் இப்போது தான் உணர்ந்தேன். நான் உயிரோடு இருக்கும்வரை அரசியலுக்கு வரமாட்டேன். எந்த பதவியையும் ஏற்கமாட்டேன்’’ என்று கூறியிருந்தார். அதை ஏற்றுக்கொண்ட அம்மா, சசிகலாவை தவிர மற்றவர்கள் மீது உள்ள நடவடிக்கை தொடரும் என அறிவித்தார்.

பின்னர் எங்களிடம், நான் சசிகலாவை எனது உதவிக்காகத்தான் அனுமதித்து உள்ளேன். யாரும் அவரோடு தொடர்பு கொள்ளக்கூடாது என்று கூறினார்.

எனவே, எம்.ஜி.ஆரின் எண்ணப்படி அம்மா எப்படி ஒரு மக்கள் இயக்கமாக கொண்டு சென்றாரோ? அந்த இயக்கம் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிவிடக்கூடாது என்பது தான் அடிப்படை நோக்கம். ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டும். சசிகலாவின் பிடியில் இருக்கும் ஆட்சி இருக்கக்கூடாது.

தற்போது அ.தி.மு.க.வில் உள்ள 122 எம்.எல்.ஏ.க்களும் நிம்மதியாக இல்லை. அவர்களின் பிள்ளைகளும், மனைவிகளும் அவர்களை திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் ஆன்மாவும்,அம்மா ஜெயலலிதாவின் ஆன்மாவும் அவர்களை நிம்மதியாக இருக்கவிடாது. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு செயல்பட்டு கொண்டு இருக்கிறோம்.

இந்த மர்ம மரணத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆணையம் விசாரித்து உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்கவில்லை என்றால் இப்போது இருக்கிற எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் எந்தவிதத்திலும் தப்பமுடியாது. இதை தெளிவுபடுத்தவில்லை என்றால், மிகப்பெரிய எழுச்சி, புரட்சி ஏற்படும்.

இதற்கான முதல்கட்ட போராட்டம் தான் உண்ணாவிரத போராட்டம். இந்த போராட்டம் இதுவரை இந்திய அளவில் நடைபெறாத மாபெரும் உண்ணாவிரதமாக வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அந்த உண்ணாவிரத போராட்டத்தை நாம் காலையில் தொடங்கி நடத்தும்போது, அதை டெல்லியில் அலசி ஆராய்ந்து போராட்டம் முடியும்போது, நீதி விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என்ற செய்தி வரும் வகையில் உண்ணாவிரதம் அமைய வேண்டும். ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.  இவ்வாறு அவர் பேசினார்.