மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு

மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு

திங்கட்கிழமை, மார்ச் 06, 2017,

சென்னை: 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எய்ம்ஸ் மருத்துவர்களின் மருத்துவ அறிக்கை இன்று வெளியாகி உள்ளது. இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாட்டின் உயரிய மருத்துவ நிறுவனமான எய்ம்ஸ் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

எய்ம்ஸ் சார்பில் அதன் மருத்துவர்கள் ஐந்து முறை விஜயம் செய்து பரிசோதித்த முன்னாள் முதல்வரின் மருத்துவ அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை எய்ம்ஸின் துணை இயக்குநர் வி.ஸ்ரீனிவாஸ், தமிழகத்தின் சுகாதாரம் மற்றும் மருத்துவநலத்துறையின் முதன்மை செயலாளர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணனிடம் டெல்லியில் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி செப் 22ம் தெதி மூச்சு திணறல் காரணமாக மயக்க நிலையில் இருந்தார் ஜெயலலிதா. செப். 22ம் தேதி இரவு 10 மணிக்கு உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனைக்கு தொலைபேசி  மூலம் ஆம்புலன்ஸ் கேட்கப்பட்டது.

இதையடுத்து 10.25 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர்சத்து குறைவு, நீரழிவு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு 5 முறை சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்த போது அரசு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

டிசம்பர் 4ம் தேதி இதய செயழிழப்பு ஏற்பட்ட போது ஜெயலலிதாவுக்கு உடல்நிலையை ஆய்வு செய்தனர். இதையடுத்து உலக தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதயம் செயல்படவில்லை என உறுதி செய்யப்பட்ட பின் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.