மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணையை சந்திக்கத் தயார் : ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணையை  சந்திக்கத் தயார் : ஓ.பன்னீர்செல்வம்

வியாழக்கிழமை, மார்ச் 09, 2017,

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட்டால், அதைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் புதன்கிழமை அவரது அணியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் 36 இடங்களில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது :- தமிழகம் முழுவதும் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் முழு வெற்றிபெற்றுள்ளது. ஒரு குடும்பத்தின் ஆட்சி இருக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. ஆனால், அதிமுகவின் இன்றைய நிலை தலைகீழாக உள்ளது.மருத்துவமனையில் ஜெயலலிதா 75 நாள்கள் இருந்தார். அவரைப் பார்க்க ஒருவரைக்கூட அனுமதிக்கவில்லை. வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிக்கலாம் என்று எவ்வளவோ மன்றாடிக் கேட்டோம். அதைக் காது கொடுத்துக்கூட கேட்கவில்லை. டிசம்பர் 5-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் ஜெயலலிதா இறந்துவிட்டதாகத் தகவல்கள் வந்தன. மருத்துவமனையில் 6.45 மணியளவில் இருந்தோம். ஆனால், மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா மரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றே இழுத்து, இரவு 11.30 மணிக்கே அறிவித்தனர்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ராதாகிருஷ்ணன் அவர் கூறியிருப்பதை திரும்பப் பெற வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அவர் மீது நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடுப்பேன்.
முதல் குற்றவாளி: ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்றால், முதலில் பன்னீர்செல்வம்தான் விசாரிக்கப்படுவார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். நீதி விசாரணை வேண்டும் என்று கோருவதே நான்தான் எனும்போது, விசாரணையைச் சந்திப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் 7 பேர் 2-ஆவது தளத்தில் 24 மணி நேரமும் இருந்தனர். மருத்துவமனைக்கு வருபவர்கள் யாரிடம் பேசுகிறார்கள், என்ன செய்கிறார் என்பதைக் குறிப்பதுதான் அவர்களின் வேலையாக இருந்தது. மருத்துவமனைக்கு நான் சென்றபோதும் அப்படிச் செய்தனர். நீதி விசாரணை நடைபெற்றால் முதல் குற்றவாளி விஜயபாஸ்கர்தான்.

2011-ஆம் ஆண்டு வி.கே.சசிகலா, நடராஜன் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். பிறகு, சசிகலா மட்டும் மன்னிப்புக் கடிதம் கொடுத்து கட்சியில் சேர்ந்தார். அந்தக் கடிதத்தில், ஜெயலலிதாவுக்கு எதிராக எனது குடும்பத்தினர் சதி செய்தனர் என்று சசிகலா கூறியிருந்தார்.அந்தச் சதி தொடர்ந்ததால்தான், தற்போது ஜெயலலிதா இல்லாத அசாதாரண சூழலை அதிமுக சந்திக்கிறது. அவர்களுக்கு வெறும் 122 பேர்தான்தான் (சட்டப்பேரவை உறுப்பினர்கள்) ஆதரவு. நமக்கு ஏழரை கோடி தமிழர்களின் ஆதரவும், ஒன்றரை கோடி அதிமுகவினர் ஆதரவும் உள்ளது.

எனவே, ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சியையும், ஆட்சியை மீட்கும் வரையும், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை அமைக்கப்படும் வரையும் தர்ம யுத்தம் தொடரும் என்றார்.

உண்ணாவிரத மேடை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பகுதியில் ஆதரவு தெரிவிக்க வருவோர் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. பெரிய திரைகள் அமைக்கப்பட்டு உண்ணாவிரதக் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன், சி.பொன்னையன், முன்னாள் சட்டப்பேரவை தலைவர் பி.எச்.பாண்டியன் உள்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.