மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மமுடிச்சு அவிழும் வரை தர்மயுத்தம் தொடரும் : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மமுடிச்சு அவிழும் வரை தர்மயுத்தம் தொடரும் : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

ஜூன் 19, 2017,திங்கள் கிழமை, 

திருநெல்வேலி : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மமுடிச்சு அவிழும் வரை தர்மயுத்தம் தொடரும் என்று முன்னாள் முதலமைச்சரும்,அ.தி. மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சியின் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

திருநெல்வேலியில் அ.தி.மு.க.,வின் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியின் சார்பில் எம்.ஜி.ஆர்.,நுாற்றாண்டு விழா,கட்சியினரின் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடந்தது. பி.எச்.பால்மனோஜ்பாண்டியன் தலைமை வகித்தார். வாசுதேவநல்லுார் எம்.எல்.ஏ.,மனோகரன் வரவேற்றார். பொன்னையன்,பி.எச்.பாண்டியன், செம்மலை, மைத்ரேயன், முனுசாமி, மாபா பாண்டியராஜன், ராஜ கண்ணப்பன், பி.ஆர்.சுந்தரம் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், கட்சியின் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கிய போது உடனிருந்த தலைவர்கள், தொண்டர் கள் இன்று நம்பக்கம் இருக்கின்றனர். இந்த இயக் கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்கு இங்கு கூடி உள்ளனர்.

2011-ம் ஆண்டு சசிகலா உள்பட அவரது குடும்பத்தினர் 16 பேரை ஜெயலலிதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கிவிட்டார். 3 மாதம் கழித்து சசிகலா திரும்பி வந்த போது, ஜெயலலிதா உதவியாளராக மட்டுமே சேர்த்துக் கொண்டார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள், ஜெயலலிதா மரணம் வரை கட்சியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் அவர்கள் தற்போது பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் , என ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய கும்பலிடம் இருந்து கட்சியை காப்பாற்றவே இந்த தர்ம யுத்தம் நடக்கிறது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சு அவிழும் வரை இந்த தர்மயுத்தம் தொடரும் என்று நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் மீது எடப்பாடிக்கு அக்கறை இருந்தால், சசிகலாவின் பினாமி அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வருமா என கேட்கிறேன். உள்ளாட்சி, சட்டசபை தேர்தல், பார்லிமென்ட் தேர்தல் என எதுவானாலும் நம் தலைமையிலான அ.தி.மு.க.,தான் வெற்றிபெறும். சென்னையில் விரைவில், எம்.ஜி.ஆர்.,நுாற்றாண்டு விழா நடக்க உள்ளது.இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.