‘மற்றவர் மனதை புரிந்தவரே மகிழ்ச்சியாக வாழ முடியும்’ திருமண விழாவில் பூனை கதை கூறி முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

‘மற்றவர் மனதை புரிந்தவரே மகிழ்ச்சியாக வாழ முடியும்’ திருமண விழாவில்  பூனை கதை கூறி முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

வியாழன் , பெப்ரவரி 11,2016,

அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், முக்கூர் என்.சுப்பிரமணியன், எஸ்.பி.சண்முகநாதன், மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 14 அதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமணங்களை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை நடத்தி வைத்தார்.பின்னர் திருமண விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசும்போது பூனை கதை ஒன்றை கூறினார்.

ஒருவர் ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார். அந்தப்பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது. அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் அதே பூனை அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்விக் கொண்டு வந்தது. அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டில் இருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை வருந்தவும் இல்லை.
தனக்குப் பிடிக்காத எலியை பிடிக்கிற போது இன்பம்; தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிற போது துன்பம்; தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிற போது இன்பமுமில்லை, துன்பமுமில்லை என்ற நிலை ஏற்பட்டது. எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொண்டிருந்தால் அதற்கு ஏற்ப தனக்கு துன்பம் ஏற்படாத வகையில் செயலாற்றி இருக்க முடியும். மற்றவர் இயல்பை, மனதை புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ முடியும்.
இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.