மற்ற மாநில முதல்வர்களுக்கு எடுத்துக்காட்டாக முதல்வர் ஜெயலலிதா சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்:எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

மற்ற மாநில முதல்வர்களுக்கு எடுத்துக்காட்டாக முதல்வர் ஜெயலலிதா சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்:எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

செவ்வாய், ஜனவரி 19,2016,

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வடசென்னை தெற்கு மாவட்டம் பாரிமுனை தம்பு செட்டி தெருவில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:–

மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்பவர் எம்.ஜி.ஆர். அண்ணாவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்ததில் எம்.ஜி.ஆரின் பங்கும் உண்டு.

பின்னர் அவரது கொள்கை கோட்பாடுகளைக் கட்டிக் காத்து வருபவர் ஜெயலலிதா. எந்த சூழ்நிலையிலும் இனி கருணாநிதி ஆட்சியைப் பிடிக்க முடியாது.

மற்ற மாநில முதல்வர்களுக்கு எடுத்துக்காட்டாக முதல்வர் அம்மா ஜெயலலிதா சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லா அரிசி, பசுமை வீட்டு திட்டம், பொங்கல் திருநாளில் ஏழை, எளியோருக்கு வேட்டி, சேலைகள் அனைத்தும் பாகுபாடின்றி அனைவருக்கும் சென்றடைகிறது.

ஆடு மற்றும் கறவை மாடு வழங்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.

ஏழை பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் நிதியுதவி திட்டம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா சஞ்சீவி திட்டம், பிறந்த குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள், மாணவ– மாணவிகளுக்கு மிதி வண்டிகள், லேப்டாப், புத்தகங்கள், சீருடைகள் என அத்தனையும் வழங்கப்படுவது அ.தி.மு.க. ஆட்சியில் தான்.

முதல்வர் அம்மா சொன்னதை செய்யாமல் விடமாட்டார் என்பது தான் உண்மை. கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலையை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கியுள்ளார். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதை போல இன்று யார் யாரோ நான் தான் வருங்கால முதலமைச்சர் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின் ஒரு புறம் பேன்ட் சட்டையைப் போட்டுக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றி வருகிறார். சைக்கிள் ஓட்டுகிறார். ஷு போட்டுக் கொண்டு வயலில் இறங்குகிறார். டீ கடைக்குச் சென்று டீ சாப்பிடுகிறார். இது என்ன உலக மகா அதிசயமா? நாங்கள் எல்லாம் டீக்கடையே நடத்தியவர்கள்.

விஜயகாந்த் கட்சி இன்று எதிர்க்கட்சியாக இருக்கும் அந்தஸ்தை உருவாக்கிக் கொடுத்தவர் முதல்வர் அம்மா ஜெயலலிதா.

டாக்டர் ராமதாஸ் என் மகன்தான் முதல்வர் என்று கூறிக் கொண்டு, அன்புமணி ராமதாசுக்கு முதல்வரானதும் கோப்பில் முதல் கையெழுத்துப்போட பேனாவைக் கொடுத்து காமெடி செய்து கொண்டிருக்கிறார். கொடுத்த பேனாவில் மையே இல்லையாம்! பின் எப்படி அதில் கையெழுத்து போட முடியும் என்று அன்புமணி புலம்புகிறாராம்.

உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றது. அதையடுத்து சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி.

யார் யாருடன் சேர்ந்து எந்த கூட்டணி அமைத்தாலும் அவர்களது கனவு நனவாகாது. வரும் சட்டமன்றத் தேர்தலிலும், முதல்வர் அம்மா ஜெயலலிதா கூறியபடி 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறுவது உறுதி.

தமிழக மக்களுக்காக தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர் முதல்வர் அம்மா ஜெயலலிதா. தமிழக மக்களின் நலனுக்காகவே நாள்தோறும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் கோகுல இந்திரா, எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., உள்பட பலர் பேசினார்கள்.மாவட்ட செயலாளர் கே.எஸ்.சீனிவாசன், பகுதி செயலாளர் கன்னியப்பன் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.