மழையால் பாதிக்கப்பட்ட சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து கடன் வழங்கிட வங்கி அதிகாரிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்ட சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து கடன் வழங்கிட வங்கி அதிகாரிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

வியாழன் , பெப்ரவரி 04,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த, சிறப்புத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த மழையால் பாதிக்கப்பட்ட சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து கடன் வழங்கிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கியாளர்களை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குதல் குறித்த வங்கியாளர்களுடனான, கலந்துரையாடல் கூட்டம் சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை சிட்கோ தலைமை அலுவலகத்தில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. அமைச்சர் திரு. ப. மோகன், தொழில் வணிக இயக்குனர் திரு. ஜக்மோகன் சிங் ராஜு, தொழில்வணிகத் துறையின் கூடுதல் ஆணையர் திருமதி. ரீட்டா ஹரிஷ் தக்கர் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலை மீண்டும் தொடங்கும் வகையில், ஏற்கெனவே வழங்கிய கடன்களுக்கு, கடன் தவணையை ஒத்தி வைத்தல், மறுகடன் உதவி போன்ற பல சலுகைகள் வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார். அதன்படி, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 15,931 பயனாளிகளுக்கு 391 கோடியே 26 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அவற்றில் 2,434 பயனாளிகளுக்கு 62 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கடன் உதவி வழங்க வங்கிகளால், கடன் ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த, இந்த சிறப்புத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த மழையால் பாதிக்கப்பட்ட சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து கடன் வழங்கிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வங்கியாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது.