மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நேரத்தில் கை கொடுத்த கட்டணமில்லா பேருந்து பயணம்:முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு தரப்பினர் நன்றி

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நேரத்தில் கை கொடுத்த கட்டணமில்லா பேருந்து பயணம்:முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு தரப்பினர் நன்றி

ஞாயிறு, டிசம்பர் 06,2015,

சென்னை,

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் இலவச பஸ் சேவை கை கொடுத்துள்ளது. அனைத்து பஸ்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. எந்த வித கட்டணமின்றி மாறி, மாறி பஸ்களில் பயணம் செய்து தங்கள் இலக்கை பொது மக்கள் அடைந்தனர்.இதனால் பல்வேறு தரப்பினரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

பேய் மழை;

சென்னை மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களை புரட்டி போட்ட பேய் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்தது. அதிலும் குறிப்பாக போக்குவரத்து அவர்களுக்கு மிகப்பெரிய சுமையாகவே இருந்தது. சரிவர பஸ்கள் இயக்கப்படாததால் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

பொதுவாக ‘ஷேர்’ ஆட்டோக்களில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல ரூ.10 கட்டணம் என்றால், மழை பெய்த நேரத்தில் தலா ரூ.100 வசூலித்த காட்சிகள் அரங்கேறியது. நடுத்தர, ஏழை மக்களால் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் பயணிக்க முடியாததால் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

கை கொடுத்த பஸ் சேவை;

இதற்கிடையே தமிழக அரசு நேற்று முன்தினம் இரவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், 4–ந் தேதி (நேற்று) முதல் 8–ந் தேதி வரை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் இலவசமாகவே இயக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அலுவலகம் செல்பவர்களுக்கும் கை கொடுத்தது.

நேற்று காலை முதலே சென்னை கோயம்பேடு, பாரிமுனை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. பெரம்பூரில் இருந்து கோயம்பேடு செல்ல ஒரே பஸ் கிடைக்காதவர்கள் மூலக்கடை வரை ஒரு பஸ்சிலும், மூலக்கடையில் இருந்து கோயம்பேட்டிற்கு மற்றொரு பஸ்சிலும் எந்த வித கட்டணமும் இன்றி பயணம் செய்தனர். இதேபோல் பலரும் தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இரண்டு பஸ், மூன்று பஸ்கள் மாறி மாறி பயணம் செய்து இலக்கை அடைந்தனர்.

ஆட்டோக்கள்;

இலவச பஸ் சேவை காரணமாக யாரும் கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. மாநகர பஸ்களில் நிம்மதியான பயணத்தை மேற்கொண்டதை காண முடிந்தது. இதேபோல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்களும், பெண்களும், மாணவர்களும் எந்த வித பதற்றமும் இல்லாமல் கூட்ட நெரிசல் இன்றி பஸ்சில் பயணம் செய்த காட்சிகளை பார்க்க முடிந்தது.

கட்டணமின்றி பஸ் மாறி, மாறி பயணம் செய்ததால் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் அலுவலங்களையும், தாங்கள் போக வேண்டிய இடத்தையும் அடைந்தனர். இலவச பஸ் சேவை மூலம் கோயம்பேடு மற்றும் மொத்த மார்க்கெட் பகுதிகளுக்கு சென்றவர்கள் கை நிறைய காய்கறி மற்றும் இந்த மாதத்திற்கான மளிகை பொருட்களை வாங்கி சென்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி;

இதுகுறித்து அண்ணாநகரை சேர்ந்த ரேவதி என்ற பெண் கூறியதாவது:–

தமிழக அரசு சரியான நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக போக்குவரத்துக்காக அதிகமாக செலவிட்டு இருக்கிறோம். மினி பஸ் போல எந்த இடத்திலும் ஏறி, எந்த இடத்திலும் இறங்கலாம் இதற்கான வாய்ப்பை இந்த பஸ் சேவை தந்துள்ளது. அதிலும் குறிப்பாக பெண் பயணிகளுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.என்று அவர் கூறினார்.

இதேபோல் பல்வேறு தரப்பினரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இலவச பஸ் சேவையாக இயக்கப்பட்டதால் பஸ்சில் நடத்துனர் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். வழக்கமான பஸ் நிறுத்தத்தை காட்டிலும் பயணிகளின் வேண்டுகோள்படி பஸ்கள் ஆங்காங்கே நின்றபடி சென்றன.