மழையால் பாதித்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

மழையால் பாதித்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வியாழன்,நவம்பர்,26-2015

 

சென்னை,

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பல மாணவ–மாணவிகளின் பாடப்புத்தகங்கள் நனைந்தும், வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் அவர்கள் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை ஆகியவை விலை இன்றி வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள், சீருடைகள் அனைத்தும் வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது

அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. அவ்வாறு திறக்கப்பட்ட பள்ளிகளில் 10 ஆயிரத்து 831 மாணவ–மாணவிகளுக்கு நேற்று பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் ஆகியவவை வழங்கப்பட்டன.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறியதாவது:–

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழையினால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் ஆகியவற்றை வழங்க முதல்–அமைச்சர் உத்தரவிட்டார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில்தான் மழை வெள்ளத்தால் மாணவ–மாணவிகள் புத்தகங்களை இழந்துள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாடப்புத்தகங்களை இழந்திருந்தால் அவர்கள் தங்களுடைய வகுப்பு ஆசிரியரிடம் தெரிவிக்கவேண்டும்.

முதல் கட்டமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கூடங்களில் படிக்கும் 10 ஆயிரத்து 831 மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. 7 ஆயிரத்து 131 மாணவ–மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. அதாவது பணி தொடங்கப்பட்டுவிட்டது.

கணக்கு எடுத்தல்

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் எவ்வளவு பாடப்புத்தகங்கள் தேவை என்று துல்லியமாக கணக்கு எடுக்க முடியவில்லை. காரணம் பள்ளிகள் இன்று அல்லது நாளை திறந்தால் கணக்கு சரியாக எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும்.

இதுவரை சென்னை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 619 பேருக்கும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1123 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 591 பேருக்கும் தேவை என்று கணக்கு எடுக்கப்பட்டு உள்ளது. இது தற்காலிக கணக்குதான். பள்ளிக்கூடங்கள் திறந்த பின்னர்தான் கண்டிப்பாக சரியாக மாணவ–மாணவிகளிடம் கேட்டு கணக்கு எடுக்கப்படும். காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ–மாணவிகள் பாடப்புத்தகங்களை இழந்து உள்ளோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கடலூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் அந்த மாவட்டத்தில் ஏற்கனவே இருப்பு இருந்தவை. எனவே சென்னை மாவட்டத்தில் வழங்க தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடம் கேட்டு இருக்கிறோம். எத்தனை பாடப்புத்தகங்கள் கேட்டாலும் தருகிறோம் என்று அங்கு உள்ள அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும் நோட்டு புத்தகங்களை தமிழ்நாடு நாடு காகித ஆலையிடம் கேட்டு உள்ளோம்.

30 ஆயிரம் பேர்

மொத்தத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க இது வரை கணக்கு எடுத்து உள்ளோம். ஆனால் எத்தனை மாணவர்கள் பாடப்புத்தகங்களை மழை வெள்ளத்தில் இழந்து இருந்தாலும் அவர்களுக்கு வழங்க இருக்கிறோம்.

இவ்வாறு கண்ணப்பன் தெரிவித்தார்.

போதுமான பாடபுத்தகங்கள் தயார்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் கே.மைதிலி ராஜேந்திரன் கூறுகையில், மழை வெள்ளத்தால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவ–மாணவிகள் எத்தனை பேர் என்றாலும் அவர்களுக்கு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு தயாராக உள்ளன என்றார்.