மழையின் காரணமாக உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் உத்தரவுப்படி ரூ.28 லட்சம் அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

மழையின் காரணமாக உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் உத்தரவுப்படி  ரூ.28 லட்சம் அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

வெள்ளி ,டிசம்பர்,18, 2015,

சென்னை : முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்த 6 பேர் மற்றும் மாரடைப்பில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளி ஆகியோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி காசோலைகளை வழங்கினார்.

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சென்னைமயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் தயாளன் மற்றும் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவரின் மகன் பாஸ்கர், கிண்டி வட்டம், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரின் மனைவி சங்கராந்தி, மகன் வெங்கடேஷ், சைதாப்பேட்டையைச் சேர்ந்த கண்ணப்பன் என்பவரின் மகன் அருள்தாஸ் மற்றும் சென்னை எழும்பூர் வட்டம் ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் ஆகியோர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து துயரமுற்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராகப் பணிபுரிந்து வந்த திருவல்லிக்கேணி, ராம் நகரைச் சேர்ந்த காந்தராவ் என்பவர் வெள்ளம் பாதித்த புளியந்தோப்பு பகுதியில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்து, துயரமடைந்து, அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்ததோடு, அன்னாரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நான்கு லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்துநேற்று சென்னை மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் பா.வளர்மதி, வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினர் மற்றும் மாரடைப்பால் காலமான காந்தாராவின் குடும்பத்தினரிடம் அரசின் நிவாரண உதவியாக தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.28 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

முன்னதாக, வடகிழக்கு பருவமழையின் காரணமாக வெள்ளத்தில் பொதுமக்கள் இழந்துள்ள சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் நகல் சான்றிதழ்கள், ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிடும் வகையில் சென்னை, மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமினையும் அமைச்சர் பா.வளர்மதி நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியின் போது மேயர் சைதை துரைசாமி, சென்னை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி, சட்டமன்ற உறுப்பினர் ஜி.செந்தமிழன், சுகாதார நிலைக்குழுத் தலைவர் ஆ.பழனி மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.