மழை சேதங்களுக்கு விரைவில் நிவாரணத் தொகை:சேதம் குறித்து கணக்கெடுப்பு விரைந்து நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

மழை சேதங்களுக்கு விரைவில் நிவாரணத் தொகை:சேதம் குறித்து கணக்கெடுப்பு விரைந்து நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

November 18, 2015

 

                             மழையால் பயிர்சேதம், வீடுகள், குடிசைகள், கால்நடை, படகுகள் இழப்பு கணக்கிடப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

                                                        இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் பருவமழை தொடங்கும் முன்னரே அரசு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

                                   இருப்பினும் ஒரே நாளில் அதிகளவு மழை கொட்டித்தீர்க்கும் போது, பாதிப்புகள் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. கடலூரில் மின் விநியோகம், சாலைகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. 70 நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு 2 லட்சத்து 34 ஆயிரத்து 750 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்ட நிலவரம்:

                     காஞ்சிபுரத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 180 வீரர்கள் உட்பட 673 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காவல், வருவாய் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த ஆயிரத்து 673 பேர் மீட்பு, நிவாரணப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கிய 16 ஆயிரத்து 613 பேர் 133 படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்ட 116 சிறப்பு முகாம்களில் 34 ஆயிரத்து 426 பேர் தங்கவைக்கப்பட்டு, குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வீட்டில் தங்கியுள்ளவர்களுக்கு 1 லட்சத்து ஆயிரம் உணவுப் பொட்டலங்கள், ஒரு லட்சத்து 50 ஆயிரம் அம்மா குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட தாம்பரம், முடிச்சூர் பகுதி மக்கள் வீடுகள் மற்றும் உடமைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட நிலவரம்

                  பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் 25 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டதால், மணலி புதுநகர், எழில் நகர், விச்சூர், சடையன்குப்பம் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பால் திருவள்ளூரில் சில பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளன.

நவம்பர் 16,17 தேதிகளில் கரைகளில் உடைப்பு ஏற்பட்ட ஏரிகள் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளன. 117 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 26 ஆயிரத்து 448 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு தற்போது 800 கன அடியாக குறைந்துள்ளதால், விரைவில் நீரால் சூழப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும்.

சென்னை நிலவரம்

           சென்னையில் மவுன்ட், தில்லைகங்காநகர் சுரங்கப்பாதைகளில் மழைநீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து தொடங்கியுள்ளது. மழைநீர் அகற்றும் பணியில் 470 டீசல் பம்புகள், 56 சூப்பர் சக்கர்கள், 49 தீயணைப்பு வாகனரங்கள், 74 ஜெ.சிபிக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கிய 789 பகுதிகளில் 331 பகுதிகளில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

கடந்த 16,17 தேதிகளில் அடையாறு ஆற்றங்கரையோரம் வசித்த 25 ஆயிரத்து 595 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். சென்னையில் 76 முகாம்களில் 9 ஆயிரத்து 91 பேர் தங்கியுள்ளனர். இதுவரை 6 லட்சத்து 69 ஆயிரத்து 540 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 199 மருத்துவ முகாம்கள், 17 நகரும் மருத்துவகுழுக்கள் மூலம் 36 ஆயிரத்து 40 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள இடங்கள் தவிர மற்ற பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

          சென்னையில் 216, காஞ்சிபுரத்தில் 106 மற்றும் திருவள்ளூரில் 89 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

               வடகிழக்கு பருவமழை நிவாரணத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பயிர்சேதங்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட குடிசைகள், வீடுகள், கால்நடை, படகுகள் ஆகியவை கணக்கிடப்பட்டு, நிவாரணத்தொகை விரைவில் வழங்கப்படும்” என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.