மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் – பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகள் மற்றும் நோய்த் தடுப்பு சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட சீரமைப்புப் பணிகள் தீவிரம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் – பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகள் மற்றும் நோய்த் தடுப்பு சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட சீரமைப்புப் பணிகள் தீவிரம்

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, நிதியுதவி மற்றும் நிவாரண உதவி வழங்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மழை பாதிப்பு பகுதிகளில், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், தெங்குமரஹாடா கிராமத்தில், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட திருமதி கலாமணியின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த 4 லட்சம் ரூபாய் நிதியுதவியை, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. K.R.அர்ஜூனன், தாட்கோ தலைவர் திரு. S.கலைச்செல்வன் ஆகியோர் நேரில் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர். நிதியுதவியைப் பெற்றுக்கொண்டோர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சரண்யாவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, அமைச்சர் திரு. P. பழனியப்பன் நேரில் சென்று, 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, சரண்யாவின் தந்தையிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அசோக்குமார், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாமக்கல் மாவட்டம் கூத்தாநத்தம் கிராமத்தில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த, கூலித் தொழிலாளி பழனியப்பனின் வீட்டிற்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, அமைச்சர் திரு. P. தங்கமணி நேரில் சென்று, 4 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை, பழனியப்பனின் மனைவி திருமதி தங்காயி-யிடம் வழங்கி ஆறுதல் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் திரு. P.R. சுந்தரம், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ள சிக்கநாயக்கன் பாளையத்தில் பெய்த கனமழையால் 12 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனையடுத்து, அந்த வீடுகளில் வசித்த குடும்பத்தினர் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இக்குடும்பங்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, தலா 5 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணம், விலையில்லா வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பதுமஞ்சேரி, திருவஞ்சேரி, மேற்கு தாம்பரம், கடப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் மழையின் காரணமாக வீடுகளை இழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தலா 4,100 ரூபாய், 10 கிலோ விலையில்லா அரிசி ஆகியவற்றை அமைச்சர் திரு. T.K.M. சின்னையா வழங்கினார்.

தொடர் மழை காரணமாக, மதுராந்தகம் ஏரியில் நீர்மட்டம் முழு கொள்ளளவான 23.50 அடியை எட்டியுள்ளது. இதனைத்தொடர்ந்து, அமைச்சர் திரு. T.K.M. சின்னையா, திருமதி. மரகதம் குமரவேல் எம்.பி. மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு, ஏரியின் பாதுகாப்பு மற்றும் நீர்வரத்து குறித்து ஆய்வு செய்தனர். ஏரி நிரம்பியுள்ளதால், ஏரிக்கு வரும் நீர், கிளியாற்றின் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கருங்குழி, தண்டளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 24 பேருக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி மற்றும் தலா 10 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது.

சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் போர்க்கால அடிப்படையில், மழை வெள்ள சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலை சீரமைப்பு, மின்கம்பங்களை சீரமைத்தல் மற்றும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்றன.

சென்னை அமைந்தகரை பகுதி மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட ஜோதியம்மாள் நகர், பழைய பேருந்து குடியிருப்பு, ராணி அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அமைச்சர் திருமதி எஸ். கோகுல இந்திரா, சென்னை மாநகராட்சி மேயர் திரு. சைதை துரைசாமி ஆகியோர் உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம், கோளூர் கிராமத்திலுள்ள ஸ்ரீஅழகு ராயர் பெருமாள் திருக்கோவிலில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, அமைச்சர்கள் திரு. ஆர். காமராஜ், திரு. B.V. ரமணா ஆகியோர் பார்வையிட்டனர். முதலமைச்சர் உத்தரவின்பேரில், கோயில் விரைவில் சீரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடைபெறும் என அமைச்சர் தெரிவித்தார்.

சோழவரத்தை அடுத்த ஜெகநாதபுரத்தில், மழையால் சேதமடைந்த வீடுகளை அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுத்தலைவர் டாக்டர் வேணுகோபால், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களை அங்குள்ள அரசுப் பள்ளிகளில் தங்கவைத்து அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளையும் வழங்கினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மாரனோடை, திருநாவலூர் ஆகிய இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் திரு. ப. மோகன் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட 38 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். திருநாவலூருக்கு ஜெனரேட்டர் உதவியுடன் குடிநீர் வழங்கப்பட்டு வருவதையும் அமைச்சர் பார்வையிட்டார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தங்கம்மாள் ஓடை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் திரு. பொள்ளாச்சி ஜெயராமன், திரு. மகேந்திரன் எம்.பி., ஆகியோர் பார்வையிட்டு, சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தினர். 102 ஏக்கர் பரப்பளவில் உள்ள சின்னியம்பாளையம் குளம் நிரம்பியதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தனர்.

தொடர் மழை காரணமாக, நாகை மாவட்டம் கொள்ளிடக்கரையோரம் சேதமடைந்த மின்கம்பங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. கொள்ளிடம் ஆற்றின் கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்றும் மோட்டார்களுக்கு மின்சாரம் தடைபட்டதால், பெரிய ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு, மயிலாடுதுறை நகருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு, குடிநீர் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, நல்லம்பள்ளி, காரிமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் மழை பாதித்த பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். இதேபோல் அரூர், பாப்பிரெட்டிபட்டி பகுதிகளிலும் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினர்.