மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போலீஸ் குடியிருப்புகளை சீரமைக்க ரூ.10 கோடி:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போலீஸ் குடியிருப்புகளை சீரமைக்க ரூ.10 கோடி:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், ஜனவரி 05,2016,

சென்னை,தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போலீஸ் குடியிருப்புகளை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். சென்னையில் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், எழும்பூரில் உள்ள போலீஸ் மருத்துவமனைக்கும் புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.

மழை வெள்ளத்தால் போலீஸ் குடியிருப்புகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் குடியிருப்புகளும் வெள்ளத்தில் மிதந்தன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு போர்க்கால அடிப்படையில் உதவி செய்வதுபோல, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போலீஸ் குடியிருப்புகளையும் விரைவாக சீரமைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

அதில் சென்னையில் உள்ள போலீஸ் குடியிருப்புகளை சீரமைக்க மட்டும் ரூ.5 கோடி செலவிடப்பட உள்ளது. போலீஸ் குடியிருப்புகளை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே போலீஸ் துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஏராளமான நவீன ரக வாகனங்களை போலீஸ் துறைக்கு வாங்கி கொடுத்துள்ளார். மேலும் போலீஸ் துறையில் உள்ள பழைய கட்டிடங்களையும் புதிதாக கட்டி கொடுக்கிறார்.

அந்தவகையில் சென்னை நகரில் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தின் முகப்பு பகுதி புராதன கட்டிடமாக உள்ளதால், அதை இடிக்காமல் சீரமைக்க உள்ளனர். ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தின் பின்பகுதியை இடித்துவிட்டு அங்கு 3 மாடியில் பிரமாண்ட கட்டிடம் விரைவில் கட்டப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் மருத்துவமனை கட்டிடமும் பழமையாகி விட்டது. போலீஸ் மருத்துவமனைக்கும் 3 மாடியில் எழில்மிகு கட்டிடம் கட்டிக்கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை நகரில் 4 இணை போலீஸ் கமிஷனர்களின் அலுவலகங்களுக்கும், புதிய கட்டிடங்கள் கட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் கிழக்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகம் கட்டப்படுகிறது. பரங்கிமலையில் தெற்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகமும், அம்பத்தூரில் மேற்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகமும், வண்ணாரப்பேட்டையில் வடக்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகமும் புதிதாக கட்டப்பட உள்ளன.

போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தை நேற்றுமுன்தினம் பார்வையிட்டார். பின்னர் அவர் போலீஸ் வீட்டு வசதி வாரிய தலைமை பொறியாளர் குமார் உள்ளிட்ட அதிகாரிகளோடு புதிய கட்டிடங்களின் கட்டுமான பணி குறித்து ஆலோசனையும் நடத்தினார்.