மழை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு,நிவாரண உதவிகள் வழங்கும் பணி தீவிரம்:முதல்வர் ஜெயலலிதாவிற்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

மழை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு,நிவாரண உதவிகள் வழங்கும் பணி தீவிரம்:முதல்வர் ஜெயலலிதாவிற்கு  பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

திங்கள் , டிசம்பர் 28,2015,

தமிழகத்தில் கனமழை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, நிவாரண உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிதியுதவிகளும் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்திற்கு பலியான ஊரம்மாள், ஜெயந்தி, பூங்கொடி, சந்தியா ஆகியோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த தலா 4 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. காசோலைகளை பெற்றுக் கொண்டவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக மருத்துவ அணி சார்பில், மணலியை அடுத்த பெரியார் நகர், செங்குன்றத்தை அடுத்தகிராண்ட் லைன் ஆகிய பகுதிகளில், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இம்முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாவலூர் பகுதியில், மழைக்கால நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த, சுல்த்தான்பேட்டை கிராமத்தில், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்துள்ள நாகல்குளம் கிராமத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், செவிலியர்களும் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.