மழை வெள்ளத்தின் போது தமிழக அரசு வேகமாக செயல்படவில்லை என்ற செய்திக்கு மத்திய அரசு மறுப்பு

மழை வெள்ளத்தின் போது தமிழக அரசு வேகமாக செயல்படவில்லை என்ற செய்திக்கு மத்திய அரசு மறுப்பு

வெள்ளி, பெப்ரவரி 05,2016,

தமிழகத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது, தமிழக அரசின் நிவாரண நடவடிக்கை மெத்தனமாக இருந்ததாக மத்திய நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது என Economic Times கடந்த 2-ம் தேதி வெளியான செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

Economic Times கடந்த 2-ம் தேதி வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில், தமிழகத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது, அரசின் நிவாரண நடவடிக்கை மெத்தனமாக இருந்தது என மத்திய அரசு நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தியின் உண்மை தன்மையை சரிபார்க்காமல், மற்ற ஊடகங்களும் இதனை வெளியிட்டுள்ளன. சென்னையில் வடிகால் வசதி போதுமானதாக இல்லை என்றும், பலத்த மழையுடன், ஏரி தண்ணீரை திறந்துவிட்டதும் இந்த பெரு வெள்ளத்திற்கு காரணம் என்றும் மத்திய புவியியல் விஞ்ஞான அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, ஒடிசா அல்லது குஜராத் போல விரைவாக செயல்பட்டிருந்தால், இந்த வெள்ளத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுரை முற்றிலும் ஆதாரமற்றது, தவறானது- இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய புவியியல் விஞ்ஞான அமைச்சகத்திடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, மத்திய புவியியல் விஞ்ஞான அமைச்சகம் நேற்று அனுப்பிய கடிதத்தில், தமிழக வெள்ளம் குறித்து Economic Times கட்டுரையில் குறிப்பிட்டபடி அமைச்சகம் எந்த அறிக்கையும் அளிக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. Economic Times செய்தியாளர் தெரிவித்த கருத்துகளுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய புவியியல் விஞ்ஞான அமைச்சகம் தனது கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் அரிதிலும் அரிதான ஒரு இயற்கை பேரழிவு என்றும், அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதில் ஏற்பட்ட கவனக்குறைவு இதற்கு காரணம் இல்லை என்றும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஏற்கனவே கடந்த டிசம்பர் 13-ம் தேதி பத்திரிகைகளுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழக அரசு கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மேற்கொண்ட மீட்பு, நிவாரணம் மற்றும் குடியமர்த்தல் போன்ற பணிகள் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளன என தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.